கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது. 

கலிபோர்னியாவில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத் தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த மாதம் 15ம் திகதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத் தீயை கலிபோர்னியா கண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான காட்டுத் தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் 24 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த காட்டுத் தீயை அணைப்பதற்காக கடுமையாக போராடி வருகின்றனர்.

வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தின் சியாரா மலைப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீ, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் காட்டுத் தீயாக பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களில் இந்த காட்டுத் தீ 78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கியது.

மேலும் இந்த காட்டுத் தீ பிக் கிரீக் நகரில் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சாம்பலாக்கி விட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில் சியாரா மலைப்பகுதியில் மாமூத் பூல் நீர்த் தேக்கம் அருகே மலையேற்றத்துக்காக சென்றிருந்த 200-க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் சிக்கி கொண்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனிடையே பிரெஸ்னோ, மடேரா, மரிபோசா, சன்பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ ஆகிய நகரங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மேற்கூறிய நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் அந்த நகரங்களில் காட்டுத் தீ பரவி வரும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்த ஆண்டு கலிபோர்னியா காட்டுத் தீயில் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாகி உள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,300 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்ததாகவும் கலிபோர்னியா மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad