சுமணரத்ன தேரரின் செயற்பாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

சுமணரத்ன தேரரின் செயற்பாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு - பன்குடாவெளியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச மக்களினால் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யபட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பொலிஸார் கடமையினை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கோசமிட்டு பதாதைகளை ஏந்தி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் வயற்காணியை 1964ஆம் ஆண்டு அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு அவர்களினால் அன்று முதல் விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் குறித்த பகுதியில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் பௌத்த விகாரை இருந்ததாகவும் கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர், குறித்த இடத்திற்கு வந்து விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது. காணிக்கு உரிமை கோருவேர் விவசாயம் செய்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்து, அவர்களையும் கடுமையாக தாக்கி, தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

தினமும், மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டித்தும் அதிகாரிகளுக்கு தாக்கியதற்காக சட்ட நடவடிக்கையெடுக்க கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment