வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை மீண்டும் குடியேற்ற வேண்டும் - சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை மீண்டும் குடியேற்ற வேண்டும் - சரத் வீரசேகர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

யுத்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளினால் 25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். 

2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றவேளையில் அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் இடம்பெறாத காரணத்தினால் சில விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. 

இதன்போது நான் ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன், யுத்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளினால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதிகளவிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்று எங்கு உள்ளனர்? அவர்களுக்கு தேர்தல் உரிமை உள்ளதா? என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டு நாட்டின் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. சுயாதீன ஆணைக்குழுக்கள் என கூறிக்கொண்டு நாடு நாசமாகிவிட்டது. கடந்த ஆட்சியில் அரசியல் அமைப்பு சபையில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் கையாள்களாக இருந்து தீர்மானம் எடுத்தனர். 

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் எப்படிப்பட்டவர் என்றால் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர். இவர்கள் இருவரும்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தனர். அவர்களில் ஒருவர் தான் ரத்த ஜீவன் ஹூல். தகுதியில்லாத ஒருவரை இவர்கள் தேர்தல்கள் ஆணைகுழுவிற்கு கொண்டுவந்தனர். 

நல்லாட்சியில் நடந்த ஊழல் குற்றங்களின் போது, வழக்குகள் தொடுக்காத ஹூல் 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது முதலாவது வழக்கை தொடுத்தார். எனவே இவர்களில் கொள்கை என்ன என்பது எமக்கு நன்றாக தெரியும். தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பக்கச்சார்பான, என்.ஜி.ஓ காரர்களை நீக்க எமக்கு 20 வது திருத்தம் வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad