20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த பொம்மையாவார் : சரத் பென்சேகா - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த பொம்மையாவார் : சரத் பென்சேகா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்மையாகப் போகின்றார். அதிகாரத்தை தக்கவைக்க தொடர்ச்சியாக போராடிய ஒருவர் இறுதியாக பொம்மையாக அமர வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்மை அச்சுறுத்த நினைக்கின்றனர். ஆனால் இவற்றிக்கு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் கூறினார். 

2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருபான்மை இருப்பதனால் நினைத்த சகலதையும் செய்ய முடியுமென நினைக்கக்கூடாது, ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறிக் கூறியே எம்மை அச்சுறுத்த நினைக்கின்றனர். ஆனால் இவற்றிக்கு நாம் அஞ்சப்போவதில்லை. 

அதுமட்டுமல்ல 20 ஆம் திருத்தம் கொண்டுவரப்படுவதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்மையாக போகின்றார். பொதுஜன முன்னணியை வழிநடத்திய, அதிகாரத்திற்காக தொடர்ச்சியாக செயற்பட்ட தலைவர் இறுதியாக பொம்மை போன்று ஆகப்போகின்றார். 

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்ன ஜீவன் ஹூல் குறித்து சபையில் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். அவர் சுயாதீனமாக செயற்படவில்லை என கூறினார்கள். ஆனால் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்துகொண்டு சுயாதீனமாக செயற்பட முயற்சி செய்தமைக்காகவே அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad