பொதுமக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் - செல்வம் அடைக்கலநாதன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

பொதுமக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் - செல்வம் அடைக்கலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

யுத்தத்திற்கு பின்னர் வன்னி மாவட்ட மக்கள் அதிகளவில் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். மகாவலி அபிவிருத்தி வலயம் என்ற பெயரில் பொதுமக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமானதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். 

2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இருந்த நேரத்திலும் தேர்தல்கள் திணைக்களம் சிறப்பாக பொதுத் தேர்தலை நடத்தியுள்ளது. எமது பிரதேசத்திலே எந்தவித தவறும் இடம்பெறவில்லை, எனவே வடக்கு கிழக்கில் செயலாற்றிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள், உறுப்பினர்கள்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 

மேலும், பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன், வன்னியை தாண்டி வடக்கிற்கு செல்லும் அமைச்சர்கள் முதலில் வன்னிக்கு வந்து எமது மக்களின் நிலைமைகளை அவதானிக்க வேண்டும். எமது மக்கள் அதிகளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர். இங்கு மலசலகூடம் இல்லாத கிராமங்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால் பெண்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேர்கின்றது. இந்த விடயத்தில் பிரதமர் அமைச்சர்களுக்கு ஆணையிட்டு வன்னி மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். 

எமது மக்கள் போருக்கு பின்னர் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். மீள் குடியேற்ற விடயங்களில் சொந்த நிலங்களில் அரசாங்க ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மகாவலி வலயம் என்பது மிக மோசமாக எமது மக்களை பாதிக்கின்றது. பறவைகள் சரணாலயம் எனக் கூறிக்கொண்டு மக்கள் காணிகள் அபகரிக்கப்படுகின்றது. இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்படும். 

ஒவ்வொரு அபிவிருத்தி கூட்டத்திலும் வணலாக்காவின் செயற்பாடுகளை கண்டித்து கருத்துக்களை முன்வைத்தோம். எனவே ஒவ்வொரு மாவட்ட குழுக் கூட்டத்திற்கும் முடிவெடுக்கும் அதிகாரிகள் வந்து கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் முல்லைத்தீவு ஐயங்கண் குளம் ஆலயத்திற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மக்களை வர வேண்டாம் என பொலிசார் கூறியுள்ளனர். இது எமது மக்களின் மத உரிமைகளை பறிக்கும் செயற்பாடாகும். எனவே இவற்றில் பொலிசார் தலையிட வேண்டாம் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad