பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தோரை மாகாண சபையில் போட்டியிடுமாறு சஜித் அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தோரை மாகாண சபையில் போட்டியிடுமாறு சஜித் அழைப்பு

(செ.தேன்மொழி) 

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு அடிமட்டத்திலிருந்து கட்சியின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இவ்வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. பாராளுமன்ற தேர்தலின் போது கட்சியின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாமல் போனது. அதன் காரணமாகவே ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். 

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலி, மாத்தறை மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். தொகுதி மட்டத்தில் கட்சியை முன்னேற்றுவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்வர். 

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைத் திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. கூட்டணி அமைத்தல் தொடர்பான சட்ட வரைபும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

கட்சியின் ஒருங்கிணைப்பு சட்டவிதிகள் தொடர்பிலும், கட்சியின் கொள்கை விதிக்கமைய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad