சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் - மத்திய மாகாண ஆளுனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் - மத்திய மாகாண ஆளுனர்

(எம்.மனோசித்ரா) 

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித் யு கமகே குறிப்பிட்டார். 

சட்டவிரோத கட்டடங்களால் காணப்படும் அபாய நிலைமைகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் திங்கட்கிழமை கண்டியில் உள்ள மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மத்திய மாகாணத்தின் பொறியியலாளர் சேவையின் பிரதி பொதுச் செயலாளர், மாகாண பொறியியலாளர் சேவை திணைக்களத்தின் பணிப்பாளர், கண்டி நகர சபை நகர பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், கண்டி - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர், புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். 

கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற சட்டவிரோத கட்டடங்கள் பற்றி இதன்போது இவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

குறிப்பாக அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தந்திரமாக நகரத்திற்குள் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. தரமற்றதும் கட்டுமானத்திற்கு பொருந்தாத பொருட்களைப் பயன்படுத்தி சிலர் ஆபத்தான கட்டடங்களை கட்டியுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது. 

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுனர், சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராயுமாறும், அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment