போதைப் பொருள் பாவனையிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கான சட்டம் ஒன்று கடுமையாக அமுல்படுத்தப்படும் - மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

போதைப் பொருள் பாவனையிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கான சட்டம் ஒன்று கடுமையாக அமுல்படுத்தப்படும் - மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ

சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து விடுவிப்பதற்கான கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண பாதுகாப்பு குழுவினர்களுடனான கலந்துரையாடலொன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நேற்றுமுன்தினம் (17) மாகாண கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் போதைப் பொருளுக்கு அடிமையாகி வரும் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து விடுவிப்பதற்கான சட்டம் ஒன்று கடுமையாக அமுல்படுத்தப்படும்.

பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும். இதை கவனத்திற் கொண்டு அனைவரும் செயற்படுவது அவசியமாகும்.

மாணவர்களை போதைப் பொருளில் இருந்து விடுவிப்பது குறித்த சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரினது ஒத்துழைப்பும் அவசியம் தொடர்பாக வலியுறுத்தினார். பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர் தலைவர்களின் அமைப்பு ஒன்று அமைப்பது அவசியம்.

பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகளை பொலிஸார் அறிந்து கொள்வதற்காக “பொலிஸூக்கு எழுதுங்கள்” என்று பெயரிடப்பட்ட பெட்டி ஒன்று சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பொருத்துவதற்கு சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் தனியார் வகுப்புகள் நடைபெறும் இடங்களில் போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுவதை கண்டு பிடிப்பதற்காக சி.ஐ.டி குழுவினர் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யு.வீரசிங்க தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சிறைச்சாலைகளில் வெளிபாதுகாப்பு குறித்து விசேட பாதுகாப்பு குழுவொன்றை அமர்த்துவது தொடர்பாக மேற்படி பாதுகாப்பு குழுவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சிக்கு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

காவத்தை விசேட நிருபர்

No comments:

Post a Comment