இலங்கைக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

இலங்கைக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது

இந்தியாவின் மண்டபம் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகின் மூலம் கடத்த தயார் நிலையில் இருந்த சுமார் ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் கட்டி மூடைகளை மெரைன் பொலிஸார் சனிக்கிழமை மாலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். 

வாகன சாரதி உள்ளடங்களாக வேதாளை பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் கடத்த உள்ளதாக இராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மண்டபம் மெரைன் காவல் நிலைய காவலர்கள் வேதாளை கடற்கரைக்கு சனிக்கிழமை மாலை விரைந்தனர். 

அப்போது குஞ்சார்வலசை பகுதியில் இருந்து வேதாளை நோக்கி கடற்கரை வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. வாகனத்தை நிறுத்திய மெரைன் பொலிஸார் வாகன சாரதியிடம் விசாரனைகளை மேற்கொண்டனர். 

இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தால் சந்தேகம் அடைந்த மெரைன் பொலிசார் வாகனத்தை சோதனை செய்ததில் 34 மூடைகளில் சமையல் மஞ்சள் கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் வாகான சாரதி உள்ளடங்களாக 3 பேரை கைது செய்த மெரைன் பொலிஸார் 34 மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். 

இவ்விடையம் குறித்து கருத்து தெரிவித்த மெரைன் ஆய்வாளர் கனகராஜ், இலங்கைக்கு நறுமண பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் மெரைன் பொலிஸார் வேதாளையில் ஆயிரம் கிலோ மஞ்சளை பறிமுதல் செய்துள்ளனர். 

கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சையில் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கிலோ 95 ரூபாவிற்கு விற்கப்படும் மஞ்சள், இலங்கையில் கிலோ 3,500 ரூபாவிற்கு மேல் விற்கப்படுகின்றது. 

இதையறிந்து கடத்தல் கும்பல் ஈரோட்டில் இருந்து கிலோ கணக்கில் மஞ்சள் வாங்கி வந்து இருப்பு வைத்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கினர். மஞ்சளை கொடுத்து விட்டு அதன் தொகைக்கு நிகரான தங்கம் கடத்தி வர இக்கும்பல் திட்டமிட்டிருந்தது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

No comments:

Post a Comment