'இந்தியா எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை கொடுக்கிறது' : பிரதமர் மஹிந்தவுடனான இணையவழி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி..! - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

'இந்தியா எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை கொடுக்கிறது' : பிரதமர் மஹிந்தவுடனான இணையவழி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி..!

இந்தியாவின் 'அயலகத்திற்கு முன்னுரிமை' என்ற அதன் கொள்கையின் கீழும் (Neighbourhood First Policy) பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் (Security and Growth for All in the Region) இலங்கைக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது என்று இன்று சனிக்கிழமை கூறியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமையானது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை இணையவழி மூலமாக உச்சி மாநாடொன்றை நடத்திய மோடி, இந்தக் கலந்துரையாடலுக்கான தனது அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு இலங்கைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். 

'இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்தவை. எனது அரசாங்கத்தின் அயலகத்திற்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு நாம் எப்போதும் விசேட முன்னுரிமை கொடுக்கிறோம்' என்று மோடி கூறினார். 

'இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்த இணையவழி இரு தரப்பு உச்சி மாநாட்டிற்கான எனது அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கு உங்களுக்கு (மஹிந்த ராஜபக்ஷ) நன்றி. 

நீங்கள் மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காகவும் உங்கள் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரு வெற்றிக்காகவும் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்' என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இத்தகைய இணையவழி இரு தரப்பு உச்சி மாநாட்டை அயல் நாடொன்றுடன் பிரதமர் மோடி நடத்துவது இதுவே முதற்தடவையாகும். 

2020 ஆகஸ்ட் 9 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற முதலாவது இராஜதந்திர கலந்துரையாடல் இதுவாகும். 

இந்த இணையவழி உச்சி மாநாட்டிற்கு முன்னதாக கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இவ்வருடம் பெப்ரவரியில் பிரதமர் மஹிந்தவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment