இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் - சார்ல்ஸ் எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் - சார்ல்ஸ் எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் அமைச்சரவையில் கலந்துரையாடி நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். 

அதேவேளை தென்பகுதி மீனவர்கள் மட்டுமன்றி சட்ட விரோதமாக செயல்பட எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சார்ல்ஸ் நிர்மலநாதன் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

வடக்கில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப் படகுகள் தொழிலில் ஈடுபட்டு கடல் வளங்களை அழித்து வருவதாகவும், அதேவேளை தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து வடக்கு மீனவர்கள் தொழில் செய்வதற்கு பெரும் தடையாக உள்ளதாகவும் அவர் தமது கேள்வியின் போது குறிப்பிட்டார். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இழுவைப்படகு தடை தொடர்பில் செயற்படுவதற்கு கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சட்டரீதியாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. 

2018, 2019, 2020 காலங்களில் 64 வெளிநாட்டு படகுகளை எமது கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் 258 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மூன்று தடவைகள் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்பட்டது. எனினும் இந்திய மீனவர்கள் அந்த இணக்கப்பாட்டை மீறி செயல்படுகின்றனர்.

அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதிய ஒழுங்கு விதிகளை கொண்ட கடற்றொழில் தேசியக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில் துறையில் வல்லுனர்கள் மற்றும் மீனவர் சமூகத்துடன் கலந்துரையாடி அந்த தேசிய கடற்றொழில் கொள்கை தயாரிக்கப்பட்டு வெகு விரைவில் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சம்ஷ்பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad