20 ஐ பாராளுமன்றத்தில் எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லட்டும் என்கிறார் அமைச்சர் செஹான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

20 ஐ பாராளுமன்றத்தில் எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லட்டும் என்கிறார் அமைச்சர் செஹான்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் எதிர்ப்பவர்கள் அதனை எதிர்ப்பதற்கான முறைமை ஒன்று உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என சபையில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, சபையில் அது தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் 69 இலட்சம் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்தே அரசாங்கம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதென அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வர்த்தகப் பண்டங்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஜனநாயகம் பற்றி இப்போது பேசுபவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை முழுமையாக அவமதித்தே செயற்பட்டனர். 

அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது மட்டுமல்ல அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து திருத்தங்களுடன் 20 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றுவது உறுதி.

எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களில் தாம் ஆட்சியில் இருந்தபோது பாராளுமன்றத்தை சர்வாதிகாரமாக நடத்தியதுடன் ஜனநாயகத்தை முற்றிலும் இல்லாதொழித்தனர்.

நாட்டு மக்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்கள் ஆணையைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருகிறது.

பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வந்த கடந்த கால அரசாங்கத்தை மக்கள் நிராகரித்து விட்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad