மக்கள் பணத்தை ஜனாதிபதி நினைத்தால்போல் கையாள யார் அனுமதி கொடுத்தது - சபையில் கேள்வி எழுப்பினார் ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

மக்கள் பணத்தை ஜனாதிபதி நினைத்தால்போல் கையாள யார் அனுமதி கொடுத்தது - சபையில் கேள்வி எழுப்பினார் ஹர்ஷ டி சில்வா

Crowd-sourcing public policies : Harsha de Silva appointed as acting  minister
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

காபந்து அரசாங்கத்தின் ஆட்சியில் மே மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் அரசாங்கம் நிதி செலவீனங்களை எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய கையாண்டது. மக்கள் பணத்தை ஜனாதிபதி நினைத்தால்போல் கையாள யார் அனுமதி கொடுத்தது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்லா சபையில் கேள்வி எழுப்பினார். 

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் 1021 பில்லியன் ரூபாய்களை கடனாக பெற்றுள்ளனர். எந்த அங்கீகாரத்தை பெற்று இந்த கடனை அரசாங்கம் பெற்றுள்ளது எனவும் கேட்டார். 

உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்கு விதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், மே மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் அரசாங்கம் நிதி செலவீனங்களை எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய கையாண்டது. நிதி முகாமைத்துவம் பாராளுமன்றத்திடம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மூலமோ அல்லது இடைக்கால கணக்கறிக்கை மூலமோ நிறைவேற்றி நிதி அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். 

ஆனால் இந்த அரசாங்கம் குறித்த காலத்திற்கு எவ்வாறு அரச நிதியை கையாண்டது. இவ்வாறு எந்தவொரு அனுமதியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் எவ்வாறு அரசாங்கம் அரச நிதியை கையாள முடியும். சபாநாயகர் நீங்கள் இவற்றை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. 

ஜனாதிபதிக்கு அரச நிதி விடயங்களை நினைத்தால்போல் கையாள முடியாது. சபைக்கே நிதி அதிகாரம் உள்ளது. இந்த நிதி மக்களின் பணம். மக்களின் பணத்தை ஜனாதிபதியினால் நினைத்தால் போல் செலவழிக்க எந்த அனுமதியும் இல்லை. ஆனால் சபாநாயகரோ வேறு எவருமோ இதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 

என்ன அடிப்படையில் மக்கள் பணத்தில் கை வைத்தீர்கள். நிதி அமைச்சர் கைச்சாத்திட்ட அனுமதிப்பத்திரம் எங்கே? சபாநாயகர் இதற்கு பதில் தெரிவித்தே ஆக வேண்டும். நீங்கள் என்ன செய்தேனும் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி என்ன அதிகாரத்தை கொண்டு நிதி விடயங்களை கையாண்டார். 

அரசியல் அமைப்பில் அவ்வாறு எந்தவொரு சரத்தும் இல்லை, எம் அனைவருக்கும் கடமைகள் உள்ளது. அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். கொரோனா காலத்தில் நெருக்கடிகள் இருந்தது உண்மையே, அதனை விளங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது இருந்தோம். ஆனால் பாராளுமன்றத்தில் செய்ய வேண்டிய கடமைகளை நிராகரிக்க முடியாது. 

பாராளுமன்றதில் இன்னமும் 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்படவில்லை, நிதி அதிகாரம் இன்னமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது. எனவே அரசாங்கம் பதில் கூறியாக வேண்டும். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் கடன் தொகை 5500 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நாட்டின் மொத்த கடன் தொகையானது 13031 பில்லியனாக இருந்தது. ஆனால் மத்திய வங்கியின் புதிய அறிக்கையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலம் வரையில் நாட்டின் மொத்த கடன் தொகையானது 14052 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

அப்படியானால் புதிய அரசாங்கம் ஆட்சியின் முதல் ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் 1021 பில்லியன் ரூபாய்கள் கடன் பெற்றுள்ளனர். ஒரு ட்ரில்லியன் ரூபாய்களால் மக்களின் மீது கடனை சுமத்தியுள்ளனர். கடனுக்கான அதிக பணத்தை நாம் வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது, வாங்கியுள்ள கடனையும், வட்டியையும் செலுத்த ஆண்டுக்கான வருமானம் போதாதுள்ளது. எனவே இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். 

அவ்வாறு இருக்கையில் இந்த கடனை எவ்வாறு பெற்றீர்கள், எந்த அங்கீகாரத்தை பெற்று இந்த கடனை அரசாங்கம் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் அனுமதி இல்லாது, எவ்வாறு இவ்வாறன கடனை பெற்றுக் கொள்ள முடியும். மக்கள் மீது எவ்வாறு சுமையை அதிகரிக்க முடியும். இதுவே இன்றைய மிகப்பெரிய பிரச்சினையாகும். ஜனாதிபதிக்கு நிதியை கையாள எந்தவொரு அனுமதியும் அரசியல் அமைப்பில் இல்லை.

No comments:

Post a Comment