எதிர்ப்புக்களை மீறி நிறைவேற்றப்படுமா 20ம் திருத்தம்? மக்கள் இறையான்மையின் இறுதிக்கட்டமா? - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

எதிர்ப்புக்களை மீறி நிறைவேற்றப்படுமா 20ம் திருத்தம்? மக்கள் இறையான்மையின் இறுதிக்கட்டமா?

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் கடந்த செவ்வாய்(22) எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சட்டமூலம் சமர்பிக்கப்பட்டு முதல் 7 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. 

உயர்நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்பிற்கு சவால் விடுவதே இதன் நோக்கம் என்பதுடன் அவ்வாறு சவால்கள் இல்லாவிடின் 20 ஆவது திருத்தம் 7 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். 

அதனடிப்படையில் இதுவரையில்(25) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 12 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் அதாவது அக்டோபர் 14க்குள் தனது முடிவை வழங்க வேண்டும். 

21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால் அதன்பின்னர் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் குழுநிலை அமர்வின் போது 20 ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். 

பின்னர் மூன்றாவது வாசிப்பின் போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன் அதில் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் 

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் புதிய திருத்தத்துக்கு எதிராக எதிர்கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. 

2015 மார்ச் இல் கடந்த அரசாங்கத்தில், 19ஆவது அரசியல் சட்டத் திருத்த முன்வைக்கப்பட்டது. 

இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக இலங்கை மாறியது. 

ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். ஜனாதிபதியின் ஒரு ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும். 

ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 1/2 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும். 

ஜனாதிபதியாக எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு சட்ட ஏற்பாடுகள். 

நாட்டின் ஆணைக்குழுக்கள் சுயாதீனமான முறையில் தெரிவுசெய்யப்பட வேண்டும். 

போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கி பொது மக்களின் மத்தியில் அதிக வரவேற்போடு 19 வது மாற்றம் கொண்டு வரப்பட்டது. 

பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை நிலவிவரும் எமது நாட்டில் சமநிலைகளை மீறி அரசியலமைப்புக்கான திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் அதைக் கொண்டு வந்த அரசாங்கம் மக்களின் அதிருப்திக்கு இலக்கானது மாத்திரமன்றி நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைகளும் தோன்றின. தற்போதைய அரசாங்கத்திற்கு ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் தெளிவான மக்கள் ஆணை கிடைத்ததோடு, அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்தல் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமான தலைப்பாகவும் மாறியிருந்தது. 

19 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கும் முக்கியமான மூன்று விடயங்களை 20 ஆவது திருத்தச் சட்டத்திலும் உள்ளடக்க தவறவில்லை. அந்த வகையில் 

தகவல் அறியும் உரிமையை அங்கீகரிப்பதற்கு பாதுகாப்பதற்குமான நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், தகவல் ஆணைக்குழு வைக்கப்படும் விதம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது 

அதேபோல் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை தொடர்ந்து ஐந்து வருடங்களாக பேணுவதற்கும், 

ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகளின் எண்ணிக்கையை இரண்டாகவே வைத்திருப்பதற்ககும் அடுத்துள்ள நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும். 

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றப்படும் சூழலில் சாதாரண பொதுமகனாக நாம் கவனிக்கக்ப்படவேண்டியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டியதுமாக விடயங்கள் எனது பகுப்பாய்வு அடிப்படையில் 

01. சுயாதீன ஆணைக்குழுவின் தன்மைக்கு விடுக்கப்பட்ட சவால் 

19ம் திருத்தத்தில் காணப்பட்ட ஆணைக்குழுக்கள் காணப்பட்டாலும் அதற்கான சுயாதீனம் 20ம் திருத்தத்தில் இல்லாமல் போயுள்ளது குறிப்பாக தேர்தல ஆணைக்குழுவின அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமை - ஆட்சியாளர் யாராக இருந்தாலும் மக்களின் அபிப்பிராயம் தேர்தல் ஊடாகவே பிரதிபலிக்க பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் தேர்தல் திணைக்களம் இயங்கிய காலத்திலும், 

தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னரும் ஓரளவுக்கு சுயாதீன தன்மையை பேணி தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன 

20ஆவது திருத்தச்சட்ட ஊடாக ஆணை குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியல் அதிகாரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய நியமன அதிகாரியும் ஒரு போட்டியாளராக இருப்பதால், போட்டியை நியாயமாக நடத்தி முடிவினை அறிவிப்பதில் அவர்களின் காத்திரம் எவ்வாறானதாக இருக்கும்?. 

தேர்தல் ஒன்றின் போது அரசு அதிகாரம் மற்றும் அரச சொத்துகளின் தவறான பாவனையைத் தடுப்பதற்கு இருந்த அதிகாரம் இல்லாது செய்யப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது. அதன்படி, தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற நியமனங்கள், இடமாற்றம், பதவி உயர்வு உள்ளது அபிவிருத்தி கருத்திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணைக்குழு கொண்டிருந்த அதிகாரம் அற்றுப்போகிறது. 

02. தேசிய பெறுனை (கொள்வனவு) ஆணைக்குழு கணக்காய்வு ஆணைக்குழு ரத்துச்செய்யப்பட்டுள்ளமையும் ,அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யமுடியாமையும் 

அரசாங்கம் எதிர்காலத்தில் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் எதிர்பார்ப்புடன் இருக்குமானால், அரசாங்கத்தின் தரப்பில் முடிவுகளை எடுக்கின்ற நபர்களின் பாதுகாப்புக்கு இன்றியமையாத தேசிய பெறுனை (கொள்வனவு) ஆணைக்குழு இரத்துச் செய்யப் படுவதையும் கணக்காய்வு ஆணைக்குழு இரத்துச் செய்யப் படுவதையும் நியாயப்படுத்த முடியாது 

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம்,மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் கணக்காய் விலிருந்து நீக்கப்பட்டுள்ளமை மக்களின் அதிருப்திக்கு காரணமாக அமையலாம். இவ்வாறான விடயங்களை ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது மனசாட்சி உள்ளவர்களால் அனுமதிக்கப்படவோ முடியாது 

03. இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவர் பாராளுமன்றம் செல்லலாம் 

வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை பிரஜைகள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அரச தலைவராக அல்லது பாராளுமன்றத்தில் ஓர் உறுப்பினராக வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுள்ள ஒருவரைத் தெரிவு செய்தல் நாட்டையும் நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும். இதன் மூலம் அமெரிக்க பிரஜையோ அல்லது சீன பிரஜையோ நாடாளுமன்ற உறுப்பினராகலாம். 

அந்த வகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கீதா குமாரசிங்கவும் தமது வெளிநாட்டு குடியுரிமையைத் துறந்து இலங்கை மக்களுக்குச் சேவை செய்ய எடுத்துள்ள முடிவை நாம் மதிக்க வேண்டும். 

04. ஓராண்டு கழிந்த நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கின்றது. 

பாராளுமன்ற தேர்தலில் (59 சதவீதம் வாக்குகளால்) பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் கூடுதலான மக்கள் ஆதரவுடன் ஐந்து வருடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தை ஓராண்டின் பின்னர் கலைக்கும் அதிகாரத்தை தனி ஒரு நபரிடம் ஒப்படைத்தல் ஜனநாயகத்தின் எந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரியவில்லை. அதற்கு தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் இணங்க முடியுமா என்பதை அவரவர்தம் மனசாட்சியை வினவ வேண்டும். இது பாராளுமன்றத்தின் இறைமையை புறக்கணிப்பதாகும். 

05. பாராளுமன்ற சட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் குறைகின்றது. 

பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டு வரும்போது, வர்த்தமானியில் அதனை வெளியிட்டு மக்கள் அதனை ஆய்வு செய்து தேவையான இடையிடைச் செய்வதற்காக 14 நாட்கள் வழங்கப்படுவதுண்டு. அதனை 07 நாட்களுக்கு மட்டும் படுத்தியுள்ளன மக்களின் உரிமையை மட்டும் படுத்துவதாகும். 

பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் மற்றும் நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர், ஒம்புட்ஸ்மென் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் வரவேற்பினை கொண்டுள்ள போதிலும் 20 திருத்தத்தின் மூலம் மிதமிஞ்சிய அதிகாரங்கள் தனி ஒருவரிடம் இருப்பது அனைவரின் கேள்விக்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு பேரவை நெறிப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதும், அரச சேவை ஆணைக்குழுவின் ஒரு சில அதிகாரங்கள் அமைச்சரவைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருப்பதும் மீன பரிசீலிக்கப்பட வேண்டும். 

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்னர் அந்த விடயம் தொடர்பில் சரியாக ஆய்ந்தறியுமாறு மக்கள், மாண்புமிகு உறுப்பினர்களிடம் வேண்டுகிறோம். 

KM. றினோஸ் 

No comments:

Post a Comment