பொதுமக்கள் புறக்கணிப்பார்களாயின் மீண்டும் கொவிட் 19 வைரஸ் சமூகத்தினுள் பரவ அதிக வாய்ப்புள்ளது - தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

பொதுமக்கள் புறக்கணிப்பார்களாயின் மீண்டும் கொவிட் 19 வைரஸ் சமூகத்தினுள் பரவ அதிக வாய்ப்புள்ளது - தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர்

கொவிட் 19 வைரஸ் பரவல் இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும் சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் அவ்வாறனதொரு நிலை ஏற்படாது என நிச்சயமாகக் கூற முடியாது என தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். 

பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிப்பார்களாயின் மீண்டும் கொவிட் 19 வைரஸ் சமூகத்தினுள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. முதற்கட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நூறு வீதம் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தி விட முடியாது எனவும் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கூறியதாவது, கொவிட் 19 வைரஸானது சமூகங்களிடையே பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் ஆரம்ப கட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சிலருக்கு இரண்டாவது பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடியாமல் போகலாம். உடல் வெப்பத்தை பொறுத்தே அது கணிக்கப்படுகின்றது. 

எனவே ஆரம்ப பரிசோதனைகளில் எதனையும் நூறு வீதம் உறுதியாகக் கூறிவிட முடியாது. அதனாலேயே வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் சமூகங்களிடையே தொற்று பரவலை எம்மால் தடுக்க முடிந்தது. 

எனினும் தற்போது மக்கள் வழமையான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்நாட்டு போக்குவரத்துகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. அதனால் மக்கள் மத்தியில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இல்லாமல் போயுள்ளது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் நாட்டுக்குள் இனங்காணப்பட்ட போதும் ஆரம்பத்திலிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பின்பற்றப்படுவது குறைவாகவே உள்ளது. சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் புறக்கணித்தால் நாட்டுக்குள் மீண்டும் கொவிட் பரவல் அபாயம் அதிகரிக்கும். 

முக்கியமாக பஸ் மற்றும் புகையிரத பயணங்களின் போது முகக் கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். போக்குவரத்தில் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்து விட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் உரிய முறையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வழிபாட்டுத் தலங்கள், வியாபார நிலையங்கள், வைபவங்கள் போன்ற பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிவதோடு கை கழுவுதுல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். 

வெளிநாடுகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு அவர்களது வீட்டுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது. தேவையேற்படின் மட்டுமே அவர்கள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இலங்கையில் அவ்வாறில்லாமல் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டவர்களையும் கூட வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் சமூகத்திற்கிடையே தொற்று பரவலை பெருமளவில் எம்மால் தடுக்க முடியுமாயிருந்தது. 

அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படாமையினாலேயே தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாகும். சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கொவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கூட மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளன. 

இலங்கை பிரஜைகள் 50,000 இற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இன்னும் சிக்கியுள்ளனர். விசா இல்லாமை போன்ற பிரச்சினைகளால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நாட்டுக்கு அழைத்து வரப்படும் அனைவரையுமே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் போது கொவிட் பரவல் ஏற்படாது தடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad