பொலிஸார் வாபஸ் பெறாவிட்டால் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் - எச்சரிக்கிறார் கெமுனு விஜேரத்ன - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

பொலிஸார் வாபஸ் பெறாவிட்டால் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் - எச்சரிக்கிறார் கெமுனு விஜேரத்ன

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

பஸ்களுக்கான ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகளும் பயணிக்க வேண்டும் என பொலிஸார் நடைமுறைப்படுத்தி இருக்கும் சட்டம் ஏற்புடையது அல்ல. இதனை பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

போக்குவரத்து பொலிஸார் நடைமுறைப்படுத்தி இருக்கும் வீதி ஒழுங்கு சட்டம் அமுல்படுத்தி இருக்கும் நிலையில் இன்று முதல் பஸ்களுக்கான ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகளும் பயணிக்க வேண்டும் என பொலிஸாரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வீதி ஒழுங்கு சட்டம் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து பொலிஸாரால் நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. அதில் பஸ் வண்டிகளுக்கு என்று தனி ஒழுங்கு வர்த்தமானி படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இன்று முதல் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டிகளும் பஸ் ஒழுங்கையில் பயணிக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்திருக்கின்றனர். பொலிஸாரின் இந்த தீர்மானம் நாட்டில் இருக்கும் சட்டத்தை பொலிஸாரே மீறும் செயலாகும். இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். 

அத்துடன் முச்சக்கர வண்டி பஸ் ஒழுங்கையில் பயணிப்பதால் நடைமுறைப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முச்சக்கர வண்டி ஒன்றுக்கு மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலே பயணிக்க முடியும். இவ்வாறான நிலையில் 60 தொடக்கம் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பஸ் வண்டி அதற்கு பின்னால் பயணிப்பது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியதாகும். 

அத்துடன் இந்த வீதி ஒழுங்கு சட்டம் காரணமாக மோட்டார் வண்டி ஓட்டுனர்கள் விபத்துக்களுக்கு ஆளாகும் அபாயம் இருக்கின்றது. ஏதாவது ஒரு விபத்துக்கு ஆளாகினால் அதற்கான பொறுப்பை பொலிஸார் ஏற்றுக்கொள்வார்களா? ஒரு சில வீதிகளில் இரண்டு வீதி ஒழுங்கைகள் மாத்திரம் இருக்கின்றன. அவ்வாறான வீதிகளில் வீதி ஒழுங்கு சட்டம் சாத்தியப்படாத தொன்றாகும். 

எனவே பஸ் ஒழுங்கையில் மோட்டார் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி பயணிக்க வேண்டும் என்ற சட்டத்தை பொலிஸார் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுக்கிக்கொள்ளும். 

அத்துடன் பொலிஸார், போக்குவரத்து சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைத்து வீதி ஒழுங்கு சட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad