உலக பொருளாதார நெருக்கடியிலும் 1,60,000 பேருக்கு வேலை வாய்ப்பு, அரசின் பொருளாதார முகாமைத்துவமே காரணம் என்கிறார் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 9, 2020

உலக பொருளாதார நெருக்கடியிலும் 1,60,000 பேருக்கு வேலை வாய்ப்பு, அரசின் பொருளாதார முகாமைத்துவமே காரணம் என்கிறார் பந்துல

முழு உலகமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கையில் பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியடைந்ததுடன் அரசாங்கத்தின் கடன் சுமை வெகுவாக அதிகரித்தது என தெரிவித்த அமைச்சர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தலைமையிலான ஐந்து வருட காலத்தில் நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி காணப்பட்டதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதியமைச்சின் உற்பத்தி வரி திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்தில் நாட்டு மக்களுக்கு பாரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வரி நிவாரணம் மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிட முடியும். கடன்களுக்கான வட்டி தனி இலக்கமாக வைக்கப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கும் கைத்தொழில் துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.

இலட்சக்கணக்கான விவசாயிகளின் தொழில் துறைகளை பாதுகாக்கும் வகையில் இன்று சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிச் சலுகை மூலம் அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமென கூறுபவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அறியாதவர்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில் வெளிநாட்டு கையிருப்பு பெரும் வீழ்ச்சி நிலையையே கண்டது.

அதேவேளை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது பங்குச் சந்தையும் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் காரணமாக அனைத்து துறைகளும் பெரும் வீழ்ச்சியடைந்தன. அத்தகையதொரு நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.

உலகில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் லட்சக் கணக்கானோரின் தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மாத்திரம் 40 இலட்சத்துக்கும் அதிகமான தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறை பெரும் பாதிப்பு கண்டுள்ள நிலையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழில் துறைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. 

இத்தகையதொரு சூழ்நிலையிலேயே சிறந்த பொருளாதார முகாமைத்துவத்துடன் எமது அரசாங்கம் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளது. அத்துடன் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அரசு துறையில் தொழிலாளர்களாக நியமனங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறைக்கும் சிறந்த பொதி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்ரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment