உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு திட்டமொன்றை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி பணிப்பு - 15,000 கறவைப் பசுக்களை இனப்பெருக்கம் செய்ய நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு திட்டமொன்றை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி பணிப்பு - 15,000 கறவைப் பசுக்களை இனப்பெருக்கம் செய்ய நடவடிக்கை

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச, தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண்ணையாளர்களை இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புல் வகைகளை வளர்த்தல், கறவை பசுக்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தி விரைவாக இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் தேவையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் சுட்டிக்காட்டினார்.

கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் வருடாந்த பால் தேவையில் 40 வீதத்திற்கும் குறைவான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. போசணையுள்ள சுத்தமான பசும்பாலை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இதன் காரணமாக மக்களுக்கு கிடைப்பதில்லை. அடுத்த பத்து ஆண்டுகளில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்ததாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான கறவை இனங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உயர் தரம் வாய்ந்த புல் வகைகளை வளர்த்தல் மற்றும் பசுக்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

மொத்த பசும்பால் உற்பத்தியில் சுமார் 85 வீத உற்பத்தி சிறியளவிலான பால் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களை வலுவூட்டி குறித்த விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

ஒரு லீட்டர் பாலின் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதனால் பண்ணையாளர்கள் ஊக்கமிழந்துள்ளனர். புற்கள் உள்ளிட்ட பசுக்களுக்கான உணவுகளை நிவாரண அடிப்படையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டியதன் தேவையையும் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். 

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு தேவையான விலங்குணவு உற்பத்திக்கு பண்ணையாளர்களை ஊக்குவிப்பது நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டது. 

விலங்கு பண்ணைகளை அண்மித்த சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தலையிட வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் அதனை பண்ணையாளர்களுக்கு சுமையாக ஆக்கிவிடக் கூடாதென்று குறிப்பிட்டார்.

பாரம்பரியமாக நடத்தி வரும் விலங்கு பண்ணைகளை மக்களின் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகள் இன்றி மூடிவிடக்கூடாதென பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். 

பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு 15 தோட்டக் கம்பனிகளின் பங்களிப்புடன் 15,000 கறவைப் பசுக்களை இனப்பெருக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டார். 

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை விரிவுபடுத்தல் பாரியளவிலான உற்பத்தியாளர்களை ஏற்றுமதி சந்தையுடன் தொடர்புபடுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

முட்டை, கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2020ஆம் ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் துறை முதலீட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad