நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு 1,500 ரூபாவிற்கு உரப்பை - பெரும் போகச் செய்கைக்கு போதிய உரத்தை விநியோகிக்க துரித திட்டம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு 1,500 ரூபாவிற்கு உரப்பை - பெரும் போகச் செய்கைக்கு போதிய உரத்தை விநியோகிக்க துரித திட்டம்

நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு ரூ. 1,500விற்கு உரப்பை-Rs 1500 for Fertilizer Bags for Other Cultivation
நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோ கிராம் உரப்பை ஒன்று 1,500.00 ரூபாவுக்கு எந்தவொரு விவசாயிக்கும் சந்தையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெரும்போகச் செய்கைக்கான உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்கவும் துரித நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உர மானியக் கொள்கை அடிக்கடி மாற்றமடைந்ததால், உர இறக்குமதி செய்யும் கம்பனிகளுக்கு சரியான வகையில் கொடுப்பனவு செலுத்தப்படாமை, தரநியமமற்ற உரம் சந்தைக்கு வந்தமை போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. 

அதனால், அந்நிலைமையைத் தவிர்ப்பதற்கு 2020/21 பெரும் போகத்திலிருந்து விவசாயிகளுக்கு உரத்தை வழங்குவதற்கான பொறிமுறையைச் சரியான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக கீழ்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுத்தல், சூழல் நேய உரப் பாவனையை நெற் செய்கையாளர்களிடம் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

2020/21 பெரும்போகத்திற்கான நெற் செய்கையாளர்களுக்குத் தேவையான உரம் மெட்ரிக் டொன் 230,000 இனை அரச உரக் கம்பனி ஊடாக விரைவுபடுத்தி இறக்குமதி செய்தல்.

நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு 2020/21 பெரும்போகச் செய்கைக்காக உரம் 332,000 மெட்ரிக் டொன் தேவைப்படுவதுடன், அதற்கமைய உரக் கம்பனிகளிடம் 40,000 மெட்ரிக் டொன் கையிருப்பை கவனத்தில் கொண்டு, மேலதிமாகத் தேவைப்படும் 300,000 மெட்ரிக் டொன் உரம் இறக்குமதி செய்வதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள உரக் கம்பனிகளுக்கு அனுமதி வழங்கல்.

தகுதிவாய்ந்த ஏனைய உரக்; கம்பனிகளுக்கு அதிகப்படியான 5,000 மெட்ரிக் டொன் அளவின் கீழ் 2020/21 பெரும்போகத்திற்கான உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கல்.

நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்று 1,500.00 ரூபாவுக்கு எந்தவொரு விவசாயிக்கும் சந்தையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல்.

அதற்கமைய, மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவும் இணைந்து சமர்ப்பித்த கூட்டு பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad