கடலில் பதுக்கி வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுருக்கு வலைகள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

கடலில் பதுக்கி வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுருக்கு வலைகள் மீட்பு

மட்டக்களப்பு தேத்தாதீவு கடற் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுதி சுருக்கு வலையை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் மீட்டுள்ளதாகக் கடற்றொழிற் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது பிரதேசத்திற்குப் பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர், விசேட அதிரடிப் படையினர், ஆகியோர் ஒன்றிணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் ஸ்தலத்திற்கு நேரடியாக விஜயம் செய்த கடற்றொழிற் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நிலைமையை அவதானித்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

அப்பகுதி கடற்றொழில் பரிசோதகருக்குக் கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிமித்தம் கடலில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுதி கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதியற்ற சுருக்கு வலைகளும், ஒரு இயந்திரப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதி எனவும், அவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். 

அப்பகுதி கடற் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதியின்றி சுருக்கு வலைகளைச் சிலர் பயன்படுத்துவதாகவும், அவற்றைத் தடை செய்யுமாறும் கோரி கரைவலை மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை களுதாவளை கடற்கரையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad