ஆட்சியாளர்களால் விற்கப்படும் தேசிய சொத்துக்கள், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் அநுரகுமார - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

ஆட்சியாளர்களால் விற்கப்படும் தேசிய சொத்துக்கள், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் அநுரகுமார

தமது சமூகத்துக்குள் ...
(எம்.மனோசித்ரா)

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டியேற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி தெரிவிக்கின்றது. மக்கள் ஆணையை மீறி தேசிய சொத்துக்கள் தற்போதைய ஆட்சியாளர்களினாலும் விற்கப்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் வழமையைப்போன்று நாட்டு மக்கள் ரணில் மற்றும் சஜித் தரப்பினரை ஆதரிப்பாளர்களாயின் அவர்கள் ஊழல் மோசடிகளிலிருந்து தப்புவதற்காக ராஜபக்ஷ தரப்பினருக்கே ஆதரவளிப்பார்கள். எனவே இவ்வாறான மோசமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கு மக்கள் மாற்றி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்ஷ தரப்பினர் தேசிய சொத்துக்கள் விற்கப்படுவதைப் பற்றி அதிகமாகப் பேசி வெற்றி பெற்றனர்.

ஆனால் தேர்தலின் பின்னர் அது பற்றி எந்தவொரு கருத்தும் வெளியிடப்படவில்லை. எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூறி மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தற்போது முழுமையாக தான் வழங்கிய வாக்குறுதிக்கு முரணாகவே செயற்படுகின்றார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் இந்த அரசாங்கம் இதுபோன்றுதான் செயற்படுகிறது. தேசிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிக்கும் துறைமுக தொழிற்சங்கம் ஒன்றினால் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் மக்களின் ஆணையையும் எதிர்பார்ப்பையும் மீறி தற்போது மீண்டும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்காக முழு முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டியேற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைகத்தையும் மீளப் பெற்றுக்கொள்வோம் என்று கூறினார்கள். தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்த மக்கள் இம்முறை அந்த தீர்வு குறித்து குழப்பமடைந்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று ஜனாதிபதித் தேர்தலின்போது கூறினார்கள். ஆனால் தனிமைப்படுத்தல் கட்டளை சட்டம் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதும் காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதிச்சடங்கு, சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டது மாத்திரமின்றி அவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவமுடைய குருணாகல் கட்டடத்தை உடைத்தமைக்கு காரணமாக இருப்பவரை பாதுகாக்கும் வகையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறிய கருத்திற்கு ஜனாதிபதி அடிபணிந்துள்ளதைப் போன்று செயற்படுகின்றார்.

தற்போது பொலிஸ் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பினை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழைய அரசாங்கமே மீண்டும் செயற்படுகிறது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad