பிரதிப் பிரதமர் பதவி தொடர்பில் எவ்வித தீர்மானமுமில்லை, பசில் உள்வாங்கப்படுவாரா இப்போதைக்கு கூற முடியாது : அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

பிரதிப் பிரதமர் பதவி தொடர்பில் எவ்வித தீர்மானமுமில்லை, பசில் உள்வாங்கப்படுவாரா இப்போதைக்கு கூற முடியாது : அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ...
(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கான மட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்படுவாரா என்பது குறித்து எதுவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்ட கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், எனினும் தேவையேற்படும் பட்சத்தில் அந்தந்த விடயங்கள் அவற்றுக்குரிய நேரத்தில் நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரதிப் பிரதமர் பதவியொன்றை உருவாக்கி, அதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் காணப்படும் மட்டுப்பாடு நீக்கப்பட்டு பசில் ராஜபக்ஷ பாராளுன்றத்திற்கு உள்வாங்கப்படுவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கான மட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டமைக்கான நோக்கம் என்னவென்பதையே முதலில் நோக்க வேண்டும். ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போதே நாடளாவிய ரீதியில் கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் விரும்புவதையும், அவர் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதையும் பலரும் அறிந்திருந்தார்கள். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட ரீதியான தடையொன்றை ஏற்படுத்தும் வகையிலேயே 19 ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கான மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அந்தத் திருத்தம் நீக்கப்பட்டு, பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்படுவாரா என்பது தொடர்பில் இப்போதைக்கு எதனையும் கூற முடியாது. எனினும் தேவையேற்படும் பட்சத்தில் அந்தந்த விடயங்கள் அவற்றுக்குரிய தருணத்தில் நிச்சயமாக நடைபெறும். எனினும் இது விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தனியொரு நபரை மையப்படுத்தியதாக அமையாது. மாறாக நாட்டின் நலனை முன்நிறுத்தியதாகவே அமையும் என்றார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரதிப் பிரதமர் பதவியொன்றை உருவாக்கி, அதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்குத் திட்டமிடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து வினவியபோது, அத்தகைய தீர்மானங்கள் எவையும் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment