இழுவைப் படகு, தொழில், குடியிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

இழுவைப் படகு, தொழில், குடியிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ...
இந்திய இழுவைப்படகுகள் பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் தீர்வு எட்டப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி, இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப் படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினைக்கு துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்களா என அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. இவ் விடயம் தொடர்பில் எனக்குத் தெரியாது. ஆனாலும் இந்திய இழுவைப்படகு பிரச்சினை என்பது இரணைதீவிற்கு மாத்திரமல்ல வடக்கு மாகாணத்திற்கே பெரும் சவாலாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்திய அரசுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். வடக்கில் அச்சுறுத்தலாக காணப்படும் இந்திய இழுவைப்படகினை எல்லை பகுதிக்குள் அனுமதிக்காதவாறு தடுப்பதற்கான உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் விரைவில் இரணைதீவு பகுதிக்கு செல்வோம்.

அப்போது குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கவனம் செலுத்துவோம். இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அப்போது எதிர்கட்சியில் இருந்தாலும் எனது பங்கும் இருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் எனக்கு இதுவரை யாரும் தகவல் தரவில்லை. அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த முக்கிய விடயங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கடலட்டை வளர்ப்பதற்கான பண்ணைகளை அமைத்து கொடுத்துள்ளோம்.

மேலும் பல தொழில்சார் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஆனாலும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. அடுத்துவரும் வாரத்தில் அப்பகுதிக்கு செல்லவுள்ளோம். இதன்போது இந்திய இழுவைப்படகு, அவர்களின் தொழில் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றார்.

பரந்தன் நிருபர்

No comments:

Post a Comment