ஜனாதிபதியின் கொள்ளை பிரகடனத்தில் அவர் கூறியதைப் போன்ற எந்த நிபுணத்துவம் மிக்க விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை - பாராளுமன்ற உறுப்பினர் எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

ஜனாதிபதியின் கொள்ளை பிரகடனத்தில் அவர் கூறியதைப் போன்ற எந்த நிபுணத்துவம் மிக்க விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை - பாராளுமன்ற உறுப்பினர் எம்.மரிக்கார்

முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு ...
(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் அவர் கூறியதைப் போன்ற எந்த நிபுணத்துவம் மிக்க விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, நாட்டை ஒழுங்கான பாதையில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருப்பதன் காரணமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடணத்தை பார்க்கையில் அவர் கூறிய எந்த நிபுணத்துவமும் அதில் காண்பதற்கில்லை. இந்த கொள்கைத் திட்டம் எதிர்வரும் ஐந்து வருடங்களையும் இலக்கு வைத்த திட்டமாகும்.

இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதனை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இந்த கொள்கை பிரகடணத்தில் உள்ளடக்கப்படவில்லை. 

இலங்கையை பொருத்தமட்டில் சுற்றலாத்துறை ஊடாகவே பெறும் வருமானம் கிடைக்கப் பெறுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் இதனூடாக ஒரு பில்லியன் டொலராவது கிடைக்கப் பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சிக்கலுக்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கொள்கை பிரகடணத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பத்திக், மட்பாண்ட அமைச்சுகளை விமர்சிக்க நான் விரும்பவில்லை. தேசிய உற்பத்திகளை முன்னேற்ற வேண்டும்தான் ஆனால், இந்த உற்பத்தி பொருட்களுக்கான வரவேற்பு தொடர்பிலும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். வர்த்தக செயற்பாடுகளின் போது சந்தைப்படுத்தல் என்பது மிக முக்கிய விடயமாகும். 

இதேவேளை உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போது அதன் பயன்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் எரிபொருள் விலை குறைவடைந்த போது தங்களது நாட்டுக்கு அவசியமாக எரி பொருளை ஒரே தடவையில் பெற்றுக் கொண்டு எந்த நாட்டிலிருந்து அந்த எரி பொருளை பெற்றுக் கொண்டதோ, அதே நாட்டில் அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்து தங்களுக்கு அவசியமான அளவை மாத்திரம் நாட்டுக்குள் இறக்குமதி செய்து கொள்கின்றது. இது போன்றதொரு திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தியிருந்தால் அதன் பயன்களை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடியதாக இருந்திருக்கும்.

இதேவேளை இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழிநுட்பம் என்பது மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலின் போது நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நாம் இணையவழி கல்வியை செயற்படுத்தியிருந்தோம். ஆனால் ஜனாதிபதியின் கொள்கை பிரகடணத்தில் தகவல் தொழிநுட்பம் தொடர்பில் எந்தவித திட்டமும் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறான சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவது தொடர்பிலே பெரிதும் பேசி வருகின்றனர்.

அதற்கான தேவையென்ன? தற்போது ராஜபக்ஷர்களின் வசம் 141 நிறுவனங்களின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் பாராளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ உறுப்புரிமை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிடம் மாத்திரம் 7 நிறுவனங்களின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 19 ஆவது திருத்தத்தையும் நீக்கிவிட்டு, பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கே ராஜபக்ஷர்கள் முயற்சிக்கின்றனர். 

இந்நிலையில் கிடைத்ததை உண்டு வாழ வேண்டிய சூழ்நிலையே மொட்டுவின் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது சிரேஷ்ட பல அரசியல்வாதிகளை திட்டமிட்டு ஓய்வுபெறச் செய்வதற்கான முயற்சிகளும் மொட்டு கட்சிக்குள் இடம்பெற்று வருவதாக தெரிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா, டப்லியூ.டீ.ஜே.செனவிரத்ன மற்றும் அநுர பிரியதர்ஷண யாப்பா ஆகியோருக்கு எந்த அமைச்சுப் பொறுப்புகளும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டு, முக்கிய அமைச்சு பொறுப்புகளையும் பெற்றுக் கொண்டதுடன், எமது ஆதரவாளர்களுக்கு எந்த செயற்பாடுகளை செய்யவும் அவர்கள் இடமளிக்கவில்லை. தற்போது மொட்டு அணியில் இணைந்து கொண்டிருந்தாலும் முக்கிய அமைச்சுகள் எதுவும் பெற்றுக் கொடுக்கப்பட வில்லை.

தேசிய கலை தொடர்பான இராஜாங்க அமைச்சாராக விதுர விக்கிரமநாயக்கவை நியமித்தமையை நான் வரவேற்கின்றேன். இன்று தேசிய கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முன்னேற்ற வேண்டும். அதேபோன்று நாமல் ராஜபக்ஷவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சை பெற்றுக் கொடுத்தமை தொடர்பிலும் நாம் வரவேற்கின்றோம். ஆனால் ஒருசில முக்கிய பொறுப்புகளை ஜனாதிபதி கோத்தாபயவின் பிரசார செயற்பாடுகளுக்கு துணைபோன நபர்களுக்கு வழங்கியுள்ளமைதான் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

No comments:

Post a Comment