நடத்தி முடிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலானது சுயாதீனமாக இயங்கும் எமது நாட்டின் பொது நிர்வாக சேவையின் பலத்தையே வெளிப்படுத்துகின்றது - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, August 6, 2020

நடத்தி முடிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலானது சுயாதீனமாக இயங்கும் எமது நாட்டின் பொது நிர்வாக சேவையின் பலத்தையே வெளிப்படுத்துகின்றது - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் ...
(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலானது, சுயாதீனமாக இயங்கும் எமது நாட்டின் பொது நிர்வாக சேவையின் பலத்தையே வெளிப்படுத்துகின்றது. இதன் வெற்றியிலிருந்து மேலும் பல நாடுகள் பாடம் கற்றுக் கொள்ளும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் தெற்காசிய நாடுகளில் தேசிய ரீதியில் நடைபெறும் முதலாவது பெரிய தேர்தலாக இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று புதன்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று முடிந்தது. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது சுகாதாரமான, சுதந்திரமான, நியாத்துவமான தேர்தலொன்றே நாட்டின் தேவையாகும். தற்போது சுகாதார ரீதியான சவால்கள் அதிகரித்திருக்கும் நிலையிலும் கூட இத்தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையினை வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

அதேவேளை 2020 பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துக்கள். இந்நாட்டு மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ஆணைக்குழுவிற்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். 

அத்தோடு கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலினால் நாடு பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையிலும் கூட முன்னுதாரணமான வகையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அனைத்து அரச சேவையாளர்களுக்கும் நன்றி கூறுவதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டின் பொதுநிர்வாக சேவை சுதந்திரமானதாக இயங்குகையில் அதற்கு இருக்கின்ற பலத்தையே இந்த வெற்றிகரமான தேர்தல் வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த வெற்றியிலிருந்து பல நாடுகள் பாடம் படிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment