
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றது. இதிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்பதென்ற இலக்கு அரசாங்கத்திடம் இல்லை. அதனால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்காெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அதனை மக்களுக்கு மறைக்கின்றது. மக்களுக்கு மறைப்பதன் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து மீள முடியாது. நாட்டின் அபிவிருத்தி இலக்கை எவ்வாறு பூரணப்படுத்துவது?, எந்த காலத்தில் பூரணப்படுத்துவது என்ற விடயங்கள் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அதில் எந்த குறையும் இல்லை. ஆனால் கொள்கை பிரகடனத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதனை அதில் தெரிவிக்கப்படவில்லை.
அதனால் அரசாங்கம் முன்வைத்திருக்கும் கொள்கை பிரகடனத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதென்று நாட்டுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
அத்துடன் கொவிட் 19 காரணமாக நாட்டில் 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் தொழில் இழக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் தொழில் வாய்ப்புக்களை பாதுகாத்து மீண்டும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment