(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது பிரிக்க முடியாத பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றாகச் சமத்துவமாக வாழும் உரிமையையே. எமது கோரிக்கையை பிழையாக பொருள்கோடல் செய்யாதீர்கள். தென்னிலங்கை மக்களை எமது கோரிக்கை தொடர்பாக பிழையாக தவறாக வழிநடத்தாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது நாட்டை கட்டியெழுப்புவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது நடைபெற்று முடிந்த ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து எமக்கான மக்கள் ஆதரவு தளம் தடம்புரண்டதாக அல்லது சில சில்லறைகள் எமது மக்கள் ஆதரவைத் தடம்புரள வைத்ததாக மார்தட்டிக் கூறுவது ஏற்க முடியாது ஒன்று.
தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்த் தேசிய மக்கள் உணர்வுகளைத் தெளிவாக புரிந்து கொண்டவன் என்ற வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு ஏற்பட்ட ஒரு சறுக்கல் அவ்வளவுதான். அது தமிழ்த் தேசிய அரசியலின் முற்றுப்புள்ளியல்ல. இதை முதலில் நாம் அறிய வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு உங்களுக்கு பெரும் வெற்றி. இதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், இந்த வெற்றிக்கான காரண காரியங்களை நான் ஆராய முனையவில்லை.
நீங்கள் பெற்ற இந்த பெரு வெற்றியை நம் நாட்டில் ஐக்கியம், ஒருமைப்பாடு, இன, மத, மொழி ரீதியான சமத்துவம் என்பவற்றைக் கட்டியெழுப்பப் பயன்படுத்துங்கள்.
படைகளின் மனோபாவம், படைத் தளபதிகளின் மனோபாவம், போரின் தர்மம், போரின் அதர்மம் அத்தனையும் புரிந்தவன் நான். ஏனென்றால் நானும் முன்னாள் போராளி களமாடியவன். இதனால்தான் கூறுகின்றேன் போர்க் கால சமன்பாடு சமாதான காலத்துக்கு பொருந்தாது.
போர் வெற்றி, தேர்தல் வெற்றி மூலம் நீங்கள் கொள்ளும் மமதை சிலவேளை உங்களுக்கு விபரீதத்தை ஏற்படுத்தலாம். ஆணை பெண்ணாக்க பெண்ணை ஆணாக்க மட்டுமே முடியாத அத்தனை அதிகாரங்களையும் கொண்டு தனக்கேற்ற வகையில் அரசமைப்பை உருவாக்க தனது நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை இக்கணம் நினைவுகூர்ந்து கொள்ளுங்கள் என்றார்.
No comments:
Post a Comment