இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம், பேரம் பேசும் சக்தியும் எம்மிடமே இருக்கின்றது - ஜீவன் தொண்டமான் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம், பேரம் பேசும் சக்தியும் எம்மிடமே இருக்கின்றது - ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம் - ஜீவன்
"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம். அபிவிருத்திகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியும் எம்மிடமே இருக்கின்றது. எனவே, காங்கிரஸை மேலும் பலப்படுத்தி மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தில் அனைவரும் இணைவோம்." - என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

கொட்டகலையில் இன்று (02) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எங்கு பிரச்சாரக்கூட்டங்களை நடத்தினாலும் மக்கள் திரண்டுவந்து பேராதரவை வழங்குகின்றனர். எமக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகியதை அண்மைக் காலங்களில் கண்டோம். இன்று பேராதரவு கிட்டியுள்ளது. மலையகத்தின் தாய்க் கட்சியான காங்கிரஸின் பின்னால்தான் நாம் நிற்போம் என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.

விமர்சனம் அதேபோல் குறைகூறும் அரசியலுக்கு அப்பால் கொள்கை ரீதியில் திட்டங்களை முன்வைத்தே எமது அணி பிரச்சாரம் முன்னெடுத்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறானதொரு அரசியல் கலாச்சாரத்தையே மக்கள் விரும்புகின்றனர். அதனை ஏற்படுத்துவதற்கே நாம் முயற்சிக்கின்றோம்.

எதிர்காலத் திட்டங்களை நாம் முன்வைத்த பின்னர், தற்போது சிலர் அதேபோன்று செய்கின்றனர். எம்மால் முன்வைக்கப்படும் யோசனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். பரவாயில்லை, மக்கள் நலனே எமக்கு முக்கியம். இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஒப்பிடுங்கள். அதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் எமது விஞ்ஞாபனத்திலேயே இருக்கின்றது என்பதை கூறிக்கொள்கின்றேன்.

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது எண்ணம். அதற்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றேன். இலக்கை அடைவதற்கான வயதும் எனக்கு இருக்கின்றது. எனவே, அதிகாரத்தை வழங்கி எனது கரங்களைப்பலப்படுத்தி மாற்றத்துக்கான பயணத்தில் நீங்களும் இணையவேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் மலையகம் எப்படி இருக்கவேண்டும் என நாம் யோசிக்கின்றோம். அதற்கான திட்டங்களை அடுத்துவரும் காலப்பகுதியில் அமைப்போம்.

அதேவேளை, மலையகத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் வரைதான் கட்டப்பட்டுள்ளன. விரைவில் கணக்கு விபரத்தை வெளியிடுவோம். கட்டப்பட்ட வீடுகளிலும் பல குறைப்பாடுகள் உள்ளன. மனிதன் வாழும் வகையில் அவை அமையவில்லை.

இறுதி நேரத்தில் குழப்பங்களை விளைவிப்பதற்கு சிலர் முயற்சிக்கலாம். விழிப்பாக இருங்கள். மக்களின் பலம் காங்கிரஸ்தான். என்னதான் நடந்தாலும் தொண்டமான் இருக்கிறார் என்ற நம்பிக்கை அன்று எமது மக்கள் மத்தியில் இருந்தது. இன்று தலைவர் இல்லை. ஆனாலும் எமது பலத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, வெற்றியின் பங்காளிகளாகி மாற்றத்தை நோக்கி பயணிக்க ஓரணியில் திரள்வோம்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad