கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 2, 2020

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் கடந்த சில தினங்களாக அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 900 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 7 பேர் பலியாகியுள்ளனர். 

ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விஷயங்கள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். 

தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர். இந்த ஊர்வலத்தில் பலதரப்பட்ட மக்களும் கலந்துகொண்டனர். அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad