
நாட்டில் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இருப்பை தீர்மானிப்பதற்கான புதிய அரசியல் யாப்பிற்கான முஸ்தீபுக்கள், ஒரே நாடு ஒரே நீதியின் கீழ் முஸ்லிம் தனியார் சட்டங்களில் மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமது தணித்துவமான கட்சியான முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொண்டாட்டக் கூடியவர்கள் முன்வர வேண்டும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினரின் சம்மாந்துறை அலுவலகத்தில் சமகால அரசியல் மற்றும் கட்சி புனரமைப்பு சம்பந்தமாக தனது ஆதரவாளர்களுடான சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் முஸ்லிம் மக்களுக்குரிய ஒரேயொரு தேசிய பலம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். முஸ்லிம்களின் சக்தியும் அதுதான். ஆனால் அதனை சீர்குலைக்க பல்வேறு சதி முயற்சிகள் நடக்கின்றன. அதிலிருந்து பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிக தைரியமாக எடுத்துக் கூறுகின்ற ஒரேயொரு முஸ்லிம் கட்சி எமது கட்சியாகும். அது ஒருபோதும் நிதானம் இழந்து விடுவதில்லை. முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனி நபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் நீண்ட காலம் வாழ வேண்டும். அது எப்போதும் முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். அதுதான் முக்கியமாகும்.
இலங்கை முஸ்லிம்கள், இன்று நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரே ஒரு சமூகக் கட்சியாகவும் எமது மக்களின் ஆதரவையும் அங்கிகாரத்தையும் பெற்ற தனித்துவக் கட்சியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகிறது.
தேசிய அரசியலில் மாத்திரமல்லாமல் சர்வதேச அரசியல், சமூகங்கள் மற்றும் இயங்கங்களின் அவதானத்தையும் பெற்ற ஒரு கட்சியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை நிலைப்படுத்தியுமுள்ளது.
கடும் போக்கு சிங்கள சமூகத்தை திருப்திப்படுத்தி தனது அரசியல் இருப்பை கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுவரும் இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில் தங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் பலத்தை இன்னும் ஆழமாக ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
இன்று முஸ்லிம் காங்கிரஸ் சரியான பாதையில் நிதானமாக நேர்மையான தலைமைத்துவத்தின் கீழ் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதனை உடைக்க இன்று பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதற்கு நாம் பலிக்கடாவாக மாற முடியாது.
எமது இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதன் தலைமையை ஊக்குவிக்க வேண்டும். அது எமது கடமை. அப்போதுதான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம்.
இன்று தேசிய அரசியலில் காணப்படுகின்ற பேரினவாதப் போக்குகளைக் கடந்து, எமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காக வேறுபட்ட புதிய உபாயங்களை உருவாக்கிப் போராடுவதற்கு பெரும் பலமாக எமது கட்சியின் மக்கள் பலம் ஒற்றுமைப்பட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பும் அடிப்படையும் பிரதேச வாதங்களாலும் பதவி மோகங்களாலும் தனிநபர் முரண்பாடுகளாலும் சிதைந்து போகாதவாறு அதே கட்டுக்கோப்புடன் இருப்பதில் எப்பொழுதும் முஸ்லிம் சமூகம் குறிதவறாதவர்களாக செயற்பட வேண்டும்.
எனவே, முஸ்லிம்களுக்கு பலம் முஸ்லிம் காங்கிரஸ்தான். மக்கள் சக்தி அதற்குத்தான் இருக்கின்றது. எமது கட்சிக்காக தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொண்டாட்ட க்கூடியவர்களைக் கொண்டு கட்சிக் கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். அதற்கான அனைவரும் ஒன்றிணைய வேண்டும். என்றார்.
No comments:
Post a Comment