30,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது வியட்நாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

30,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது வியட்நாம்

Vietnam donates medical equipment to Sri Lanka
(நா.தனுஜா)

சர்வதேச நாடுகள் ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை கொவிட்-19 தொற்று நோய் போன்ற நெருக்கடி நிலைமைகள் மீளவலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் வியட்நாம், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இலங்கை முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கு உதவும் வகையில் 30,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

வியட்நாம் வெளிவிவகார பிரதியமைச்சர் குயென் குவோக் டன்க் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சில் வைத்து வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர் பிரசன்ன கமகேவிடம் இந்த மருத்துவ உபகரணங்களைக் கையளித்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாகப் பேணப்பட்டுவரும் நட்புறவு தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், நெருக்கடியான தருணங்களில் பரஸ்பரம் இரு நாடுகளும் வழங்குகின்ற உதவிகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை கொவிட்-19 தொற்று நோய் போன்ற நெருக்கடி நிலைமைகள், சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது வியட்நாம் வழங்கியிருக்கும் நன்கொடைக்கு இலங்கை மக்களின் சார்பில் நன்றி கூறிய தூதுவர் பிரசன்ன கமகே, வியட்நாமுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தயாராக இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

அதேவேளை கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வியட்நாம் முன்னெடுத்திருக்கும் சிறந்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரசாத் கமகே, இந்த நெருக்கடி நிலைமையில் வேறு பல நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிவரும் வியட்நாமின் உதவியையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment