வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஜயநாத் கொலம்பகே - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் ஜயநாத் கொலம்பகே

New Foreign Secretary assumes duties | Daily News
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட அட்மிரல் பேராசிரியர் கலாநிதி ஜயநாத் கொலம்பகே நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்மிரல் கொலம்பகே 2019 டிசம்பர் மாதத்திலிருந்து ஜனாதிபதியின் வெளிநாட்டு உறவுகளுக்கான மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார். 

அத்துடன் அவர் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றி வருகின்றார். 

ஜயநாத் கொலம்பகே இலங்கை கடற்படையில் 36 வருடங்களாக சேவையாற்றி, கடற்படையின் 18 ஆவது தளபதியாகவும் கடமையாற்றிய பின்னர் கடந்த 2014 ஜுலை முதலாம் திகதி அதிலிருந்து ஓய்வுபெற்றார்.

கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அட்மிரல் கொலம்பகே இந்திய - இலங்கை முயற்சிகள், கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய முன்னணி சிந்திப்போர் குழுமம் ஆகியவற்றில் இணைந்து செயற்பட்டதுடன் பாத்ஃபைண்டர் நிறுவனத்தில் கடல்சார் சட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார். 

மேலும் அந்த நிறுவனத்தையும் இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சர்வதேச அரசியல், மூலோபாய மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான குழு விவாதங்கள், கலந்துரையாடல்களில் கொலம்பகே பங்கேற்றிருக்கின்றார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுமாணிப்பட்டமும், லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் சர்வதேச கற்கைகள் நெறியில் கலைமுதுமாணிப் பட்டமும் பெற்றிருக்கும் ஜயநாத் கொலம்பகே இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment