அங்கொட லொக்காவின் டீ.என்.ஏ பரிசோதனைகளுக்கான மாதிரிகள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

அங்கொட லொக்காவின் டீ.என்.ஏ பரிசோதனைகளுக்கான மாதிரிகள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அங்கொட லொக்கா & கோ... கொழும்பு உட்பட ...
(செ.தேன்மொழி)

இந்தியா - மதுரை பகுதியில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் பாதாளக்குழு தலைவரான அங்கொட லொக்கா என்றழைக்கப்படும் லசந்த சந்தன பெரேராவின் டீ.என்.ஏ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக அதற்கு அவசியமான கைரேகை மற்றும் டீ.என்.ஏ மாதிரிகளை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த பாதாளக்குழு தலைவர் அங்கொட லொக்க உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல முயற்சிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்திய குற்றப் புலனாய்வு பிரிவின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், டீ.என்.ஏ. பரிசோதனைகள் ஊடாக அது உறுதி செய்யப்பட்டதன் பின்னர், இந்த உயிரிழப்பை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்பதினால், இது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த டீ.என்.ஏ. பரிசோதனைகளின் முடிவுகள் விரைவில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆர்.பிரதீப் சிங் என்ற போலி பெயரைக் கொண்டு வாழ்ந்து வந்த அங்கொட லொக்காவுக்கு எதிராக இந்நாட்டில் இரு கொலை வழக்குகளும், கொலைக்கு உதவி ஒத்தாசைகளை பெற்றுக் கொடுத்ததாக 3 வழக்குகளும் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்குச் தப்பிச் சென்றிருந்த இவர் கடந்த மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment