
பிரேசில் நாட்டின் அமேசன் காடுகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் 28 சதவிகிதம் அதிகம் என தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசன் மத்திய தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா உட்பட பல நாடுகளை சுற்றியுள்ளது.
பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.
அமேசன் மழைக்காடுகளில் 70 சதவிகித பகுதி பிரேசில் நாட்டில்தான் உள்ளது. பிரேசிலில் உள்ள அமேசன் காடுகளில் கடந்த ஆண்டு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீயில் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் அமேசன் காடுகள் தீக்கிரையாகின. இதில் மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு இழப்புகள் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்றதாகவும், அமேசன் காடுகளை தீவைத்து எரிக்க போல்சனேரோ அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டும் அமேசான் காடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் காட்டுத்தீ ஏற்பட்ட அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலின் படி கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் அமேசனில் 5 ஆயிரத்து 328 காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு (2020) அதே ஜூலை மாதம் உச்சபட்சமாக 6 ஆயிரத்து 803 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்படுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் 28 சதவிகிதம் அதிகம் ஆகும்.
இந்த காட்டுத்தீ சம்பவங்கள் கனிம வளங்களை திருடுபவர்கள், சமூக விரோதிகள், சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு தரப்பினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் அமேசனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சபட்டமாக 30 ஆயிரத்து 900 காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அதிகபட்ச காட்டுத்தீ சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment