(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் கரங்களுக்கு விலங்கு போட்டுள்ள 19 ஆம் திருத்த சட்டமும், அனாவசியமான சுயாதீன ஆணைக்குழுக்களும் நாட்டினை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. 19 ஆம் திருத்தத்தை நீக்கும் திருத்தத்தை வெகு விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றுவோம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான முழுநாள் விவாதம் நேற்று சபையில் எடுத்துக்கொண்டபோது விவாதத்தில் உரையாற்றியபோதே வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவந்த நாடகமாக அரங்கேற்றப்பட்ட திருத்தத்தின் மூலமாக மோசமான பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நான்கரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இருக்க வேண்டும்.
நாட்டையும் பாராளுமன்றத்தையும் நெருக்கடிக்குள் வைத்திருக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைமைகளும் முயற்சித்தனர். நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி, வீழ்ச்சி கண்ட நாட்டினை எமக்கு கொடுத்தனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது பாடசாலை நண்பர் நான் அவரை விமர்சிக்கவில்லை, ஆனால் இன்று எதிர்க்கட்சியில் உள்ள நபர்கள் அவரை சூழ்ந்துகொண்டு நாட்டினையும் நாசமாக்கிவிட்டனர்.
அரச ஆட்சியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை இன்று ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். அவரது கொள்கை பிரகடனத்தை ஆரம்பிக்கும் போதே கொவிட் நிலைமைகள் குறித்து பேசினார். எமது நாட்டிற்கு புதிய பொருளாதார கொள்கையை வகுத்துள்ளார். முன்னைய ஆட்சியின் கொள்கையை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டங்களை வகுத்துள்ளார். தேசிய பொருளாதாரம் பலமடைந்து வெளிநாடுகளுக்கு செல்லும் எமது பணம் எமது நாட்டில் சேமிக்கப்படும்.
அரசியல் இயந்திரத்தை மாற்றியமைக்கவும், திருத்தங்களுக்கு உள்ளாக்கவும் வேண்டும். பலமான பொருளாதார நிலைமைகளை உருவாக்க வேண்டும். புதிய தேர்தல் முறைமையை மாற்ற விடாது தடுத்தவர்கள் இன்று எதிர்க்கட்சியில் உள்ளனர். நாடே கேட்டுநிற்கும் ஒன்றை அன்று நீங்கள் நிறுத்தினீர்கள். எனினும் புதிய தேர்தல் முறைமை ஒன்றினை கொண்டுவந்து நாட்டினை பலப்படுத்தும் யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் கரங்களுக்கு விளங்கு போட்டுள்ள 19 ஆம் திருத்த சட்டமும், அனாவசியமான சுயாதீன ஆணைக்குழுக்களும் நாட்டினை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. 19 ஆம் திருத்தத்தை நீக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி பாராளுமன்றத்தில் அதனை கொண்டுவந்து நிறைவேற்றுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேபோல் இந்த அரசியல் முறைமையில் பொருளாதார நிதி நாசமாகின்றது, அதனை மக்களின் அபிவிருத்திக்கு செலுத்தும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார். தேசிய உணவு உற்பத்தியை உருவாக்குவது, தேசிய பொருளாதாரத்தை, உற்பத்தியை உருவாக்கும் வேலைத்திட்டமும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு திருத்தங்களை வெகு விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்போம். மக்கள் எமக்கு கொடுத்த ஆணையை கொண்டு நாம் முதல் கட்டமாக அரசியல் அமைப்பு திருத்தங்களை கொண்டுவருவோம். எமது பயணம் மக்கள் பயணமாக தொடரும் என்றார்.
No comments:
Post a Comment