126 அரச நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

126 அரச நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது - மனுஷ நாணயக்கார

அமைச்சர் ரிஷாத் குற்றவாளியெனில் ...
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவையின் கீழ் வருகின்ற 434 அரச நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் உள்ள விடயங்களை அரசாங்கம் உண்மையில் நிறைவேற்றுவார்களா என்பது தொடர்பில் எனக்கு சந்தேகமே உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே கோட்டையில் 20 ஏக்கர் நிலத்தை விற்றனர். அத்துடன் நிறுவனமொன்றுக்கு மொனராகலை பகுதியில் காணிகள் விற்கப்பட்டன.

அதேபோன்று ஒரே நாடு ஒரே சட்டம் என கூறுகின்றனர். ஆனால் குருநாகல் நகர மேயர் தொல்பொருள் இடமொன்றை இடித்த போது அவர் மீது கை வைக்க இடமளிக்க மாட்டோம் என்றனர். அதேபோல் அரச சேவைக்கு செல்லும் போது பொலிஸ் அறிக்கையை கேட்பதுடன் வழக்குகள் இருக்கின்றனவா எனவும் பார்க்கின்றனர். 

ஆனால் இந்த பாராளுமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும், நீதிமன்றத்தில் குற்றவாளியாக 5 வருடங்களாக சிறையில் இருப்பவரும் உள்ளார். சட்ட மா அதிபர் தனக்கு வேலைகளை செய்ய இடமளிக்கின்றார் இல்லையெனவும் கூறுகிறார்.

இவர்களின் சேவைகள் நாட்டுக்காகவா அல்லது குடும்பத்திற்காகவா என்று பார்க்கும் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ என்ற இருவர், அத்துடன் இராஜாங்க அமைச்சராக சசிந்திர ராஜபக்ஷ மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் நிபுண என ஒரு வலையமைப்பு உருவாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 3 அமைச்சுகள், கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் 23 நிறுவனங்கள், சமல் ராஜபக்ஷவின் கீழ் 17 நிறுவனங்கள், பிரதமர் வகிக்கும் அமைச்சு பதவிகளின் 76 நிறுவனங்களும், நாமல் ராஜபகஷவின் கீழ் 7 நிறுவனங்களும், சசிந்திர ராஜபக்ஷவின் கீழ் 6 நிறுவனங்களும் உள்ளன. 

அதேபோன்று அமைச்சு பெயர் குறிப்பிடப்படாத முக்கிய 7 நிறுவனங்கள் பஸில் தலைமையிலான கொவிட் கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இருக்கின்றது. இதன்படி 126 நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. 434 நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் அதாவது 26 வீதமான நிறுவனங்கள் ராஜபக்ஷ சகோதரர்கள் குழுமத்தின் கீழே இயங்குகின்றன என்றார்.

No comments:

Post a Comment