
(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கான அதிகாரங்களைக் கோரி ஒரு வார காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். எமக்கான உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் சுகவீன விடுமுறையில் செல்ல தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இது வரையில் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லையா என்பது குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் கட்டளைச் சட்டத்தின் கீழ் எமக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரண அதிகாரங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொவிட்-19 கட்டுப்படுத்தலுடன் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் பற்றி சுகாதார அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமையவும் எமக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
சட்ட ரீதியான அதிகாரங்கள் இன்றி எம்மால் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. தனிமைப்படுத்தல் அல்லது தொற்று சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு எவ்வித அதிகாரமும் இன்றி எவ்வாறு நோய் கட்டுப்பாட்டிற்கு ஒத்துழைக்க முடியும் என்பதே எமது பிரச்சினையாகும்.
இன்று (நேற்று) காலை சுகாதார அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் இனக்கம் காணப்படவில்லை. நாளை (இன்று) எமது கோரிக்கைககள் நிறைவேற்றப்படாவிட்டால் அல்லது எமக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் சுகவீன விடுமுறையில் சென்று எதிர்ப்பினை தெரிவிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment