காணிகள் தனவந்தர்களுக்கு விற்கப்படும், உயிர்பல்வகைமையையும் பாதிக்கும் - மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

காணிகள் தனவந்தர்களுக்கு விற்கப்படும், உயிர்பல்வகைமையையும் பாதிக்கும் - மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்

(எம்.மனோசித்ரா)

வன பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது எதிர்காலத்தில் அரசியல் தேவைகளுக்காக காணிகள் தனவந்தர்களுக்கு விற்கப்படும் என்பதோடு உயிர்பல்வகைமையையும் பாதிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படாத பிரதேச செயலாளரின் கீழ் நிருவகிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் எஞ்சிய வனம் என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் தொடர்பான அதிகாரங்களை மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் காரணமாக பாரிய சூழல் மாசடைவுகள் ஏற்படும் என்பதோடு உயிர்பல்வகைமையும் பாதிக்கப்படும் என்று சிரேஷ்ட சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த வனங்களை பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும்போது அதனை வெவ்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக வேறு நபர்களிடம் பகிர்ந்தளிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதேபோன்று குறித்த பிரதேசங்களை அண்மித்து வாழ்கின்ற மக்கள் பெற்றுக்கொள்ளும் குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும் என்பதோடு அவர்களது வாழ்வாதாரமும் பாதிப்படையக் கூடும்.

இவ்வாறான பல பிரச்சினைகள் ஏற்பட்டமையின் காரணமாகவே பிரதேச செயலாளர்களின் கீழ் காணப்பட்ட வனங்கள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. மீண்டும் இதனை பிரதேச செயலாளர்களிடம் வழங்கும்போது அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கான பாரிய வன அழிப்புக்கள் ஏற்படக்கூடும்.

அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாமல் போகும்பட்சத்தில் நில சீர்திருத்த ஆணைக்குழுவிடம் அவற்றை வழங்கலாம். காணிகள் அற்ற பொதுமக்களுக்கு அவற்றை பகிர்ந்தளிப்பதற்காகவே 1970 களில் நில சீர்திருத்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அதனை தவிர்த்து காணி அற்ற மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக தனவந்தர்களுக்கே காணி வழங்கப்பட்டது. 

காணிகளை இழந்த மக்கள் சட்டத்துக்கு புறம்பாக அவற்றை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தமையின் காரணமாகவே இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. இவ்விடயங்கள் தேர்தல் காலப்பகுதியில் அவசரமாக தீர்மானிக்கக் கூடியவையல்ல. மாறாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவையாகும். 

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தேர்தல் காலம் என்பவற்றின் காரணமாக பாராளுமன்றம் செயற்படாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விடயத்தில் சிந்தித்து சிறந்ததொரு முடிவை எடுக்குமாறு கோருகின்றோம்.

No comments:

Post a Comment