முகக் கவசம் அணிவதில் அக்கறையின்றி செயற்படுகின்றனர், தேவையின்றி பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

முகக் கவசம் அணிவதில் அக்கறையின்றி செயற்படுகின்றனர், தேவையின்றி பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதனால் அனைவரும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், தேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாராத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட் -19 வைரஸ் பரவல் இன்னும் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்படவில்லை. அதனால் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய தொடர்ந்தும் செயற்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நாடு வழமைக்கு திரும்பியுள்ளதால் சிலர் முகக் கவசம் அணிவதில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொலிஸார் இவ்வாறு முகக் கவசம் அணியாது ஆள்நடமாட்டம் அதிகமான பகுதிகளில் நடமாடும் நபர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களுக்கு தேவையான முகக் கவசங்களையும் பெற்றுக்கொடுத்து வருகின்றனர்.

வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஒவ்வொரு நபருக்கும் இடையில் ஒரு மீட்டர் தூர இடைவெளியை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது அனைத்து காரியாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது. இதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இடங்களிலும் இதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இதேவேளை பஸ்களின் ஆசனங்களின் அளவிற்கே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ள போதிலும், சில பஸ்களில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இது ஒரு சிக்கல் நிலைமை என்றாலும், எமது நாட்டை பொறுத்தமட்டில் போதியளவான அடிப்படை வசதிகள் இன்னமும் ஏற்படுத்தப்பட வில்லை. இதனால் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் சென்றால் பெருந்தொகையான பயணிகள் தங்களது பயணங்களை செல்ல முடியாமல் போகும். அதனால் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment