பெண் ஒருவரின் வீட்டிலுள்ள இரகசிய அறையிலிருந்து ஆயுதம், குண்டு துளைக்காத அங்கிகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

பெண் ஒருவரின் வீட்டிலுள்ள இரகசிய அறையிலிருந்து ஆயுதம், குண்டு துளைக்காத அங்கிகள் மீட்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

தெற்கு பாதாள உலக கும்பல் ஒன்றுக்கு சொந்தமானது என கூறப்படும் 12 ரீ 56 ரக துப்பாக்கிகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால், கடந்த ஜூன் 29 ஆம் திகதி ஹோமாகம - பிட்டிபன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட விடயம் குறித்த விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் அதிரடிப் படை சுற்றி வளைப்பை முன்னெடுக்க முன்னர் அங்கிருந்து 7 ஆயுதங்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 19 துப்பாக்கிகள், கொஸ்கொட தாரக எனும் பாதாள உலக தலைவனால் பொட்ட கபில என்பவருக்கு கொடுக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 7 துப்பாக்கிகள் கொஸ்கொட தாரகவின் உத்தரவில் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிரடிப் படைக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறைச்சாலை பஸ் வண்டியை தாக்கி பாதாள உலக தலைவன் ஒருவனை கொலை செய்யும் நோக்கில் இவை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் அதிரடிப் படைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும் சுற்றிவளைப்பில் 12 துப்பாக்கிகளே மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 துப்பாக்கிகள் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுகின்றது.

தற்போது பூசா சிறையில் உள்ள கொஸ்கொட தாரக, அண்மைய நாட்களில், அவரது சகாக்களை தொலைபேசியில் தொடர்புகொள்வது, சிறையில் பொருத்தப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசி இயக்கத்தை நிறுத்தும் தடை கருவிகளால் சாத்தியமில்லாமல் போயுள்ளதால் ஆயுதங்கள் இவ்வாறு வேறு நபர்களுக்கு வழங்கப்படுவது சாத்தியமின்றி போயுள்ளது.

குறித்த ஆயுதங்கள், ஹோமாகம - பிட்டிபன, மொரகஹஹேன பகுதியில் நடாத்திச் செல்லப்படும் சாகர டேலர்ஸ் எனும் ஆசன பொருட்களை விற்பனை செய்யும் இடமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று, அரச உளவுச் சேவைக்கு கிடைத்த தகவல் பிரகாரம், குறித்த விற்பனை நிலைய உரிமையாளருடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் வடக்கு பிடிபணையில் உள்ள பெண் ஒருவரின் வீடு ஹோமாகம பொலிசாரால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அவ்வீட்டின் இரகசிய அறையிலிருந்து இரு பொடி ஆமர்கள், ரிபீட்டர் ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படும் 4 தோட்டாக்கள், 7 கைக்குண்டுகள், அடையாளம் காணப்படாத தோட்டாக்கள் 4 என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

No comments:

Post a Comment