இரு சிறுவர்கள் நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி? - சிறப்பு விசாரணைக்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

இரு சிறுவர்கள் நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி? - சிறப்பு விசாரணைக்கு உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில், நீதிமன்றுக்கு அளிக்கப்பட்ட இரகசிய வாக்கு மூலங்களில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என சிறப்பு விசாரணைகளை நடாத்துமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம், இரு சிறுவர்கள் கடந்த மே மாதம் 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதுடன், அதன் பின்னர் அவ்வாக்கு மூலம் சீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறான பின்னனியில், அவ்வாக்கு மூலத்தில் கூறப்பட்டதாக தெரிவித்து சில விடயங்களை கடந்த மே மாதம் 13 ஆம் திகதியன்று சில ஊடகங்களும், இரு தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

அதனை கருத்தில் கொண்டே, இந்நிலைமையானது நீதிமன்றின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்த பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது குறித்து உடன் விசாரணை தேவை.

குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட இரகசிய வாக்கு மூலம் எவ்வாரு ஊடகங்களுக்கு சென்றன என விசாரணை நடாத்துமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுகின்றேன்.' என நீதிவான் திறந்த மன்றில் அறிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தரவிடுவதா இல்லையா என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து நேற்று, அது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சி.ஐ.டி.யினர் சார்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களான ரவீந்ர விமலசிறி, கருணாதிலக மற்றும் சுதத் குமார அகையோர் மன்றில் ஆஜராகினர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், சமிந்த அத்துகோரள, ரணிலா சேனாதீர, சஞ்சீவ, ஹசான் நவரத்ன பண்டார ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார ஆஜரானார்.

இதன்போது நீதிமன்ற உத்தர்வை அரிவித்த நீதிவான் ரங்க திஸாநாயக்க,பயங்கரவாத தடைச் சட்டம், அரசியலமைப்பின் 13 ஆம் உறுப்புரை, வீரவங்ச எதிர் சட்ட மா அதிபர் உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பு ஆகியவற்றை ஆராய்ந்து இந்த உத்தரவை பிறப்பிப்பதாக அறிவித்தார்.

இதன்படி, பயங்கர்வாத தடை சட்டத்தின் 7 (1), 7 (2) ஆம் பிரிவுகளை விஷேடமாக ஆராய்ந்த நீதிவான், அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அச்சட்டத்தில் 9 (1) ஆம் அத்தியாயத்துக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை, விசாரணையாளர்கள் சந்தேகநபராக கூட பெயரிட்டிராத நிலையில், அவரை மன்றில் ஆஜர் செய்ய உத்தரவிட தனக்கு அதிகாரம் இல்லை என அறிவித்தார்.

இங்கு அடிப்படை உரிமை மீறல் குறித்த தெளிவான அவதானிப்பு இருப்பினும் கூட நீதிவான் எனும் வகையில் தனக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை மன்றில் ஆஜர் செய்ய கட்டளை பிறப்பிக்க சட்ட ரீதியிலான இயலுமை இல்லை என சுட்டிக்காட்டி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பிலான கோரிக்கையை நிராகரித்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார முன்வைத்த விஷேட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட இரகசிய வக்கு மூலம் எப்படி ஊடகங்களுக்கு சென்றது என விசாரிக்க கட்டளை பிறப்பித்து வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இதேவேளை, சட்டத்தரனி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கிங்ஸ்பரி குண்டுத் தாக்குதளுக்கு உதவியமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதே விடயத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சகோதரர் பதியுதீன் மொஹம்மட் ரியாஜ் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி மொஹம்மட் சைனாஸ், அவர் குரித்த விசாரணைகளின் சாட்சி சுருக்கக் கோவையை கோரினார். அதற்கும் நீதிமன்றம் அனுமதித்து அடுத்த தவணையில், சாட்சி சுருக்கத்தை மன்றுக்கு சமர்ப்பிக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment