ரணில், மஹிந்த இணக்கம் : பஷில் கலைக்க அழுத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2024

ரணில், மஹிந்த இணக்கம் : பஷில் கலைக்க அழுத்தம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிரக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

எனினும் எதிர்கால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதே காலசிறந்தது என வலியுறுத்தியுள்ள பஷில் ராஜபக்ஷ மே மாதம் இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்தகமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்புக்கு நிமல் லான்சாவை ஜனாதிபதி அழைத்திருந்த போதிலும் பஷில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க விரும்பவில்லை என்று மறுதளித்தார்.

தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. எனவே மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியும் என்று பஷில் ராஜபக்ஷ அன்றைய சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். ஆனால் பஷில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக பதிலளிக்காது இறுதித் தீர்மானத்தை ஜுன் மாதத்தில் அறிவிப்பதாக கூறினார்.

ஜனாதிபதியின் பதலளிப்பின் ஊடாக பாராளுமன்றத்தை கலைக்க அவர் விரும்பவில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஜுன் மாத்தில் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லவதில் அரசியலமைப்பு ரீதியிலான தடைகள் ஏற்படும். எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்திலேயே ஜனாதிபதி உள்ளமையை இந்த சந்திப்பின்போது தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லும் முயற்சியில் பஷில் ராஜபக்ஷ இரங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தேவையான ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளதாக நெலும் மாவத்தை தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிரக்கவும் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment