பொலிஸ் பரிசோதகரை தேடி சிறப்பு நடவடிக்கை : கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

பொலிஸ் பரிசோதகரை தேடி சிறப்பு நடவடிக்கை : கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்

(எம்.எப்.எம்.பஸீர்)

போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 4 அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தடுப்புக் காவலில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸ் சட்டப் பிரிவு பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நால்வருக்கும் தலைமை வகித்ததாக கூறப்படும், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கைது செய்ய தேடி வரும் நிலையில், அவர் நாட்டிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக வெலிநாட்டுப் பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அத்துடன் நிரந்தர போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கும்பல் பயன்படுத்திய 5 ஆயுதங்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில், நேற்று மாலை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவுடன் இணைந்து நடாத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடய்ங்களை வெளிப்படுத்தினார்.

இந்த விவகார விசாரணைகளில் 25 பேரைக் கொண்ட சி.ஐ.டி.யின் மூன்று குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கைது செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்த உயர் அதிகாரிகள் பொறுப்பை மீறி செயற்பட்டுள்ளனரா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்ததாவது, இலங்கையில் ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பிலான பேச்சுக்கள் 1979 ஆம் ஆண்டே முதன் முதலில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் ஹெரோயினுடன் முதலாவது சந்தேக நபர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறான பின்னணியிலேயே போதைப் பொருள் குற்றங்களுக்கு எதிராக செயற்பட விஷேட பிரிவாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு கடந்த 3 தசாப்தங்களாக அந்த பிரிவு இயங்குகின்றது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரினால் மேற்பார்வை செய்யப்படும் அந்த பிரிவில் ஒரு பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், 3 உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் உட்பட 300 உத்தியோகத்தர்கள் வரை உள்ளனர்.

அவர்களில் ஒரு சில உத்தியோகத்தர்கள் செய்துள்ள வெட்கித் தலை குணியும் செயல்களால், நாம் போதைப் பொருள் குறித்த சுற்றி வலைப்புக்களை நிறுத்தப் போவதில்லை.

குற்றம் இழைத்துள்ள ஒரு உப பொலிஸ் பரிசோதகர், இரு சார்ஜன்கள், ஒரு கான்ஸ்டபிளை எமது சிறப்பு விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். நாம் இந்த விடயத்தை மூடி மறைக்கவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன. 

மேலும் பொலிஸ் அதிகாரிகளோ யாரோ, இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புபட்டிருந்தால் அவர்களையும் கைது செய்ய நாம் பின் நிற்கப்போவதில்லை. நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு அமையவும் பொலிஸ் ஒழுக்காற்று விதிமுறைகளின் கீழும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரையிலான விசாரணைகளில், கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நல்வரிடமிருந்தும் இரு வேன்கள், ஒரு பெஜரோ ஜீப் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

3 கோடியே 12 இலட்சம் ரூபா வரையிலான பணம் மீட்கப்பட்டுள்ளது. 10 ஏக்கர் காணி கண்டு பிடிக்கப்பட்டு, அது தற்காலிகமாக தடை செய்யப்பட்ட சொத்தாக அறிவிக்கப்பட்டு கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடக்கின்றது. 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 3 மில்லியன்கள் வரை உள்ள 3 வங்கிக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு எதிராக விஷ போதைப் பொருள் மற்றும் அபாயகரமான ஒளதடங்கள் கட்டளைச் சட்டத்தின் 54 ஆவது அத்தியாயத்தின் கீழ் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்கின்றது. அதில் அவர்கள் பயன்படுத்திய 5 ஆயுதங்கள் குறித்தும் விசாரிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தார்களா என உறுதியாக எம்மால் இப்போதைக்கு கூற முடியாது. அது தொடர்பில் மிக விரைவில் உறுதியான தகவலை வழங்க முடியும் என நம்புகின்றோம்.

கடந்த மே மாதம் வெலிசறை - மஹபாகே பகுதியில் அரிசி பைகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுக்கும் கைதாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணை நடக்கின்றது.

குறிப்பாக இந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக முதலில் விடயங்களை வெளிப்படுத்தியவர்கள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரே, அவர்களின் வெளிப்படுத்தலுக்கு அமையவே இந்த விவகார விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டன.' என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments:

Post a Comment