(செ.தேன்மொழி)
அரச ஊழியர்களின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம், சிவில் நிர்வாகப் பிரிவுகளில் இராணுவத்தினரை நியமித்து சர்வாதிகார போக்குக்கு வழியமைத்து வருகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர்மேலும் கூறியதாவது, அரசாங்கம் அரச நிர்வாகப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை நியமித்து அரச ஊழியர்களின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரச நிர்வாகப் பிரிவுகள் அனைத்திலும் இராணுவத்தினரை நியமிப்பதானது சர்வாதிகார போக்குக்கான ஏற்பாடாகவே விளங்குகின்றது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அரச ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் நலனுக்காக பல சேவைகளை நாங்கள் செய்திருந்தோம். சம்பள பிரச்சினை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டிருந்தோம்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அறவிட்டு வருகின்றது.
அரசாங்கம் பொதுத் தேர்தலை வெற்றி கொள்ளும் எண்ணத்தில், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்த ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கப் போவதாக தெரிவித்து வருகின்றது. தேர்தல் சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நியமனங்கள் அந்த சட்டவிதிகளுக்கு புறம்பானவையாகவே கருதப்படும்.
இதேவேளை அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறிக் கொண்டே அரச ஊழியர்களின் சம்பளத்தை அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இவ்வாறான நிலையில் இந்த நியமனங்களை வழங்கினால் அவர்களுக்கு எவ்வாறு அரசாங்கம் ஊதியத்தை வழங்கும்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள், மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடி என்பவற்றை காண்பித்தே ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கம் வெற்றி பெற்றது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மேற்படி மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த எட்டு மாத காலத்தில் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னியுடனே இணைந்து செய்யற்பட்டு வருகின்றார் என்றார்.
No comments:
Post a Comment