(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எம்முடன் கூட்டணியமைத்திருந்தாலும், அவர்களின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாகவே உள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியினருடன், சுதந்திர கட்சி இரகசிய பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. தேர்தல் காலத்தில் கட்சி தாவல் சம்பவங்கள் எதிர்பார்க்கப்படுவதே என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியினருடன் இரகசிய பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளார்கள் என்பது அறிய முடிகிறது. சுதந்திர கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியில் மாத்திரமே இணைந்துள்ளார்கள்.
பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை தனித்தே முன்னெடுப்போம். இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சியின் ஆதரவு இல்லாமல் தனித்து வெற்றி பெற்றதை மறுக்கமுடியாது.
பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை நிச்சயம் பெறும். தேர்தல் காலத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரது செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக உள்ளோம். தேர்தல் காலத்தில் கட்சி தாவல் சம்பவங்கள் இடம்
பெறுவது எதிர்பார்க்கப்படுவதே.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் ஏற்படுத்திய மாற்றங்களை ஒருபோதும் மறக்க முடியாது. அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து அரசியலில் பயணிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். ஒரு தரப்பினர் சுயநல நோக்குடன் செயற்பட்டால் அதற்கான தண்டனையை மக்கள் வழங்குவார்கள்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம் தோற்றம் பெறுவது அவசியமாகும். நல்லாட்சியை போன்று பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெற்றால், ஜனாதிபதி தேர்தலின் வெற்றி பயனற்றதாகும். ஆகவே, ஜனாதிபதியின் கொள்கையினை செயற்படுத்தும் அரசாங்கத்தை தோற்றுவிப்பது தொடர்பில் பெரும்பான்மை மக்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment