ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பில் மீளத்திறக்கப்படும் சிறிய பாடசாலைகளுக்கு லிப்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உடல் வெப்ப அளவீட்டுக் கருவிகளும், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதாதைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அரசின் அறிவுறுத்தல்களுக்கமைவாக படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்காக, வழங்கப்படுவதாக பெண்கள் வலுவூட்டல் மற்றும் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் லிப்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரலிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் வசதி குறைந்த சிறிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன்கருதி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய பதாதைகள், ஸ்டிக்கர்கள் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்களது உடல் வெப்பநிலையினை அளவீடு செய்யும் டிஜிடல் வெப்ப அளவுக் கருவிகளும் வழங்கி வைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் நண்கொடையாளர் செந்தூரன் தேவேந்திரராஜாவின் நிதி உதவியில் சனிக்கிழமை 04.07.2020 இப்பொருட்கள் மட்டக்களப்பில் இயங்கி வரும் 8 சிறிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வித்தியாலயம், கல்லடி விக்னேசியஸ் வித்தியாலயம், நாவட்குடா தர்மரெத்தினம் வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம், காத்தான்குடி அல்ஹஸனாத் வித்தியாலயம், ஆரையம்பதி சிவமணி வித்தியாலயம், கோவில்குளம் விநாயகர் வித்தியாலயம் ஆகிய எட்டு பாடசாலைகளின் அதிபர்களிடம் லிப்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் இப்பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்த உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் அம்கோர் அமைப்பின் பணிப்பாளர் பீ. முரளிதரன், லிப்ட் அமைப்பின் நிதிப் பணிப்பாளர் பத்மதர்ஷினி சுபாஸ்கரன், வெளிக்கள ,ணைப்பாளர் வீ. தயாநிதி உட்பட பாடசாலை அதிபர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
No comments:
Post a Comment