எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தபோது சவால் விட வேண்டியவர் பதவி இழந்து வீட்டுக்கு வந்த பின் சவால் விடுகின்றார் - முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 25, 2020

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தபோது சவால் விட வேண்டியவர் பதவி இழந்து வீட்டுக்கு வந்த பின் சவால் விடுகின்றார் - முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் எதுவுமே இதுவரையில் பெற்றுக் கொடுக்க முடியவில்லையென என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

திருகோணமலை - மூன்றாம் கட்டை பகுதியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இதுவரை காலமும் சம்பந்தன் ஒன்றுமே பெற்றுக் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. மன்னிக்கலாம். ஆனால் அவர் சென்றமுறை பதவிக்கு வந்த காலம் தொடக்கம் இன்று வரையில் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக இன்னல்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.

2015ம் ஆண்டில் இருந்த திருகோணமலை அல்ல நாம் இப்போது காணும் திருகோணமலை. சிங்கள ஆதிக்கம், பௌத்த ஆதிக்கம், படையினர் ஆதிக்கம் கூடிய நகரத்தையும் அதன் சுற்றுப் புறங்களையுமே நாம் இன்று காண்கின்றோம்.

தமிழர்களுக்கு இதோ ஒரு புதிய அரசியல் யாப்பு வருகின்றது. அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும் என்று கூறி சிங்கள அரசாங்கத்தைக் கோபமூட்டாமல் இருங்கள், உங்கள் பிரச்சினைகளை வெளிக்காட்டாதீர்கள் என்று தமது கட்சிக்காரரையும் தமிழ்ப் பொதுமக்களையும் கட்டுப்படுத்தி வைத்த சம்பந்தன் ஐயா இப்பொழுது மௌனம் சாதிக்கின்றார். ஆனால் அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றார். 

தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தபோது சவால் விட வேண்டியவர் பதவி இழந்து வீட்டுக்கு வந்த பின் சவால் விடுகின்றார்.

தமிழ் மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தால் அரசாங்கத்திற்கு கேடு விளையும் என்கின்றார். 15 பேர் பாராளுமன்றத்தில் இருந்த போதே அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் கொடுத்து பெறுவதைப் பெற வேண்டும் என்ற போது “இல்லை! நாங்கள் கனவான்கள் அரசியல் நடத்துகின்றோம். அவர்கள் எமது மேன்மையான இணக்க அரசியலுக்கு செவிசாய்ப்பார்கள்” என்றவர் இன்று சவால் விடுகின்றார். 

கூட்டிலிருந்து பறவை பறந்து சென்ற பின் கூட்டை மூடுவது போல் இருக்கின்றது அவரின் செயல்கள் எனவும் இதன்போது சுட்டிக்காட்டிய சீ.வி விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணநிலை தற்போது எப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் மக்களுக்கு சிரமம் மிகுந்ததாக மாறியுள்ளது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட சம்பந்தன் ஐயா ஒரு பெருங்காரணம் என்றார்.

ரொட்டவெவ நிருபர்

No comments:

Post a Comment