இராஜகிரியவில் கடந்த 2016 இல் இடம்பெற்ற விபத்து தொடர்பில் போலியான ஆதாரங்களை தயாரித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள, வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக தொடர்புபட்ட குறித்த விபத்து தொடர்பிலேயே அவர் மீது இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டதோடு, இது தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் (CCD) சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய, இவ்வழக்கின் மற்றுமொரு சந்தேகநபராக அவரை பெயரிட்டு, அவரை கைது செய்யும் பிடியாணையை பெறுமாறு, கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு சட்டமா அதிபர் நேற்று முன்தினம் (01) ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதன் அடிப்படையில் CCD யினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில், கொழும்பு மேலதிக நீதவான் இன்றையதினம் (03) அறிவிப்பதாக, நேற்று (02) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்றையதினம் (03) சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவை, பொழும்பு, புதுக்கடை இலக்கம் 04, மேலதிக நீதவான் அவரை பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.
ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவு வழங்கிய நீதவான், எதிர்வரும் திங்கட்கிழமை (08) CCD யில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment