அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத்தை கட்டியெழுப்ப கண்ட கனவுகளை நனவாக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுவீச்சுடன் எதிர்காலத்தில் செயற்படுமென அக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
கட்சியின் செயற்பாடுகளை கொண்டுசெல்ல இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை இ.தொ.கா நியமித்துள்ளது. இந்த இடைக்கால குழுவின் அங்கத்தவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடு தொடர்பில் வினவிய போது, அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத்தை நேசித்த மாபெரும் தலைவராவார். அதனால்தான் இறக்கும் தருணத்திலும், மலையகம் சம்பந்தப்பட்ட விடயங்களையே பேசியிருந்தார்.
அவர் மலையகத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டுசெல்ல பல வேலைத்திட்டங்களை எண்ணியிருந்தார். அவற்றை நிறைவேற்ற இ.தொ.கா முழு வீச்சுடன் செயற்படும்.
தற்போது ஐவரடங்கிய இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ஊடாக எதிர்கால நகர்வுகள் பற்றி கலந்தாலோசித்து ஆறுமுகன் தொண்டமானின் ஆசியுடன் இ.தொ.காவை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றார்.
பூண்டுலோயா நிருபர்
No comments:
Post a Comment