சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது : பாராளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது : பாராளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க

(லியோ நிரோஷ தர்ஷன்)

சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே மக்கள் மத்தியில் உண்மை நிலையினை கொண்டுசெல்ல வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேபோன்று ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகியுள்ளது. அரசியலமைப்பை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின், பாராளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். எவ்வாறாயினும் பாராளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தேயாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில், ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கூட நீதிமன்றம் செல்லவில்லை. ஏனெனில் அரசியல் கட்சி என்ற வகையில் எம்மாள் தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் செல்ல இயலாது.

மாறாக தேர்தல் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளது. அதனை அவர்கள் செய்துள்ளனர். ஆனால் அரசியலமைப்பு ரீதியான வியாக்கியாணத்தையே நீதிமன்றம் ஊடாக பெற்றுக் கொள்ள நாம் முற்பட்டோம். 

அங்கு எமக்கு சட்ட ரீதியானதொரு கருத்து காணப்பட்டது. அதாவது பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி அறிவித்ததன் பின்னர் மூன்று மாதத்திற்குள் தேர்தல் இடம்பெறாவிடின், அன்றிலிருந்து ஜனாதிபதியின் அறிவித்தல் செல்லுப்படியாகுமா ? இல்லையா ? என்பதையே நாம் அறிய விரும்பினோம்.

ஆனால் நீதிமன்றத்தை நாடியவர்கள் இவ்வாறானதொரு விடயம் குறித்து கவனத்தில் கொண்டிருக்கவில்லை. வெறும் அரசியல் நோக்கமே இங்கு காணப்பட்டது. எனவேதான் நாம் நீதிமன்ற விடயத்தில் பின்வாங்கியிருந்தோம். எவ்வாறாயினும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகியுள்ளது. 

தேர்தல் குறித்து ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பை மீறாது பாதுகாக்க வேண்டுமாயின் பாராளுமன்ற தேர்தலுக்கான மற்றுமொரு அறிவித்தலை ஜனாதிபதி விடுக்க வேண்டும். 

அத்துடன் பாராளுமன்ற அமர்வை ஆகஸ்ட் வரை ஒத்தி வைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறில்லையெனில் அரசியலமைப்பு ரீதியில் நெருக்கடியான விடயமாகிவிடும். எவ்வாறாயினும் பாராளுமன்றம் மீண்டும் கூடும் திகதியை ஜனாதிபதி அறிவித்தே ஆக வேண்டும்.

ஆகவே தேர்தல் குறித்து அவதானத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும். கட்சி என்ற ரீதியில் எமக்குள்ள பொறுப்புகளை தேர்தல் வெற்றிக்காக முழு அளவில் செயற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment